சாத்தியமில்லை என்று தோன்றியதை சாத்தியமாக்கியது மோடி அரசு - அமித்ஷா பெருமிதம்

சாத்தியமில்லை என்று தோன்றியதை மோடி அரசு சாத்தியமாக்கியது என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-15 14:23 GMT

சிம்லா,

இமாச்சலபிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலபிரதேச சட்டசபைக்கு வரும் நவம்பர் 12-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படுகிறது.

இதனிடையே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இமாச்சலபிரதேச தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன. கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளன.

அந்த வகையில் , பாஜக மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா இமாச்சலபிரதேசத்தின் சர்மவ்ரூர் மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார்.

பிரசார கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் சட்டம் 370 ரத்து செய்யப்படும் என எப்போதாவது நீங்கள் நினைத்தீர்களா? காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து சட்டம் 370 குறித்து காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களிடம் பேசினால் அவர்கள் மவுனமாகி விடுவார்கள். ஏனென்றால் அந்த சட்டம் ஜவகர்லால் நேருவால் உருவாக்கப்பட்டது. ராமர் (இந்து மதகடவுள்) கோவில் கட்டுவது குறித்து கேட்டால் கோவிலை கட்டுவோம் ஆனால் தேதியை கூறமாட்டோம் என காங்கிரஸ் கூறி வந்தது. ஆனால், அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் (இந்து மத வழிபாட்டு தலம்) கட்டும்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.

ராமர் கோவிலாக (இந்து மத வழிபாட்டு தலம்) இருந்தாலும் சரி காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து சட்டம் 370 நீக்கமாக இருந்தாலும் சரி, முன்பாக சாத்தியமில்லை என்று தோன்றியதை மோடி அரசு சாத்தியமாக்கியுள்ளது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்