தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை: மேற்கு வங்காளம், தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

‘தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பாக பதில் அளிக்க மேற்கு வங்காளம், தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2023-05-12 21:45 GMT

புதுடெல்லி, 

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பாக பதில் அளிக்க மேற்கு வங்காளம், தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள நேரடி, மறைமுக தடையை எதிர்த்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரித்தது.

மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் ஹரீஷ் சால்வே ஆஜராகி, திரைப்படம் வெளியான நாளில், வன்முறை சம்பவங்களை தடுக்கவும் இத்தடையை விதிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார். திரைப்படம் மூன்று நாட்கள் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் திரையிட்ட பிறகு தடை செய்யப்பட்டு உள்ளது. எனவே இந்த தடையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

தமிழ்நாட்டில் சில திரையரங்குகளில் திரையிடப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்டு மறைமுக தடை தொடர்கிறது. எனவே, திரையரங்குகளுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

மேற்கு வங்க அரசின் மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி ஆஜராகி, இந்த விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டில்தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். இதை சுப்ரீம் கோர்ட்டு அண்மையில் வலியுறுத்தியுள்ளது. ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியாததற்கான காரணம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. திரைப்படத்தால் பொது ஒழுங்கு கெடும், பொது அமைதி கெடும் என உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது என வாதிட்டார்.

அப்போது தலைமை நீதிபதி, திரைப்படம் நாடு முழுவதும் வெளியிடப்பட்டு உள்ளது. திரைப்படத்துக்கு மேற்கு வங்க அரசு ஏன் தடை விதிக்க வேண்டும். மேற்கு வங்க மாநிலம் நாட்டில் பிற பகுதிகளைக் காட்டிலும் வேறுபட்ட ஒன்றல்ல. திரைப்படம் பார்க்க வேண்டிய படம் இல்லை என பொதுமக்கள் நினைத்தால் அவர்கள் பார்க்கப்போவதில்லை. திரைப்படத்தை ஏன் தடை செய்ய வேண்டும்? என கேட்டார்.

இதற்கு மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி, திரைப்படத்தை பார்த்த பிறகு பொது ஒழுங்குக்கு குந்தகம் ஏற்படும் என்று கருதியதால், சட்டப்படி தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என வாதிட்டார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் கூடுதல் தலைமை வக்கீல் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி, திரைப்படத்தை தமிழ்நாடு தடை செய்யவில்லை என்பதால் பதில் அளிக்க தேவையில்லை. திரையரங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. உரிய ஆவணங்களின்றி இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என வாதிட்டார்.

இதற்கு நீதிபதிகள், திரையரங்கு பாதுகாப்புக்கு எந்த மாதிரியான நிர்வாக ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்துள்ளது என்பதை அறிய விரும்புகிறோம். தியேட்டர்கள் தாக்கப்படும்போதும், இருக்கைகள் எரிக்கப்படும்போது மாநில அரசு கண்டும், காணாமல் இருக்க முடியாது என தெரிவித்ததுடன், ரிட் மனு தொடர்பாக பதில் அளிக்க மேற்கு வங்க அரசு, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை மே 17-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்