உலகின் முதல் சி.என்.ஜி. பைக்... இந்தியாவில் நாளை அறிமுகம் செய்கிறது பஜாஜ்

பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில், எரிபொருள் செலவை குறைக்கும் வகையில் பஜாஜ் ஆட்டோவின் இரட்டை எரிபொருள் பைக் தயாரிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-04 09:45 GMT

உலகின் முதல் சி.என்.ஜி. பைக்கை பஜாஜ் நிறுவனம் நாளை அறிமுகம் செய்கிறது. பஜாஜ் நிறுவனத்தின் புனே தொழிற்சாலையில் மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி தலைமையில் நடைபெறும் நிகழ்வில், இந்த பைக் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

இந்தியாவில் ஏற்கனவே பஜாஜ் நிறுவனத்தின் சி.என்.ஜி. ஆட்டோக்கள் அமோகமாக விற்பனையாகி பெரும் வரவேற்பை பெற்றநிலையில் சி.என்.ஜி. மோட்டார் சைக்கிள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பஜாஜ் சி.என்.ஜி. பைக் ஒரே மாடலாக இல்லாமல், பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கும். குறிப்பாக இந்த பைக்கை சி.என்.ஜி. மூலமாகவும், பெட்ரோல் மூலமாகவும் இயக்கலாம். சிவப்பு, நீலம் உள்ளிட்ட 4 வண்ணங்களில் இந்த பைக் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்த பைக் 110 முதல் 125 சிசி வரையிலான திறன் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 கியர்களை கொண்ட இந்த பைக், சந்தையில் விற்பனையாகும் இதேபோன்ற பெட்ரோல் பைக்குகளை விட ரூ.15,000 அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் ஷோ ரூம் விலையாக இந்த பைக் 90,000 ரூபாய்க்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த பைக்கை வாங்கினால் வாடிக்கையாளர்கள் எரிபொருள் செலவில் ஆண்டுக்கு ரூ.13,000 சேமிக்க முடியும் என எதிர்பார்க்கலாம்.

பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில், எரிபொருள் செலவை குறைக்கும் வகையில் பஜாஜ் ஆட்டோவின் இந்த இரட்டை எரிபொருள் பைக் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை வங்காளதேசம், எகிப்து மற்றும் தான்சானியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்