பழிக்குப்பழி வாங்க திட்டம் தீட்டி கைதான 12 பேருக்கு ஜாமீன்

சிவமொக்காவில் நடந்த ஹர்ஷா கொலை வழக்கில் பழிக்குப்பழி வாங்க திட்டம் தீட்டி கைதான 12 பேருக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-05-22 15:54 GMT

சிவமொக்கா;

பஜ்ரங்தள பிரமுகர்

சிவமொக்கா டவுன் சீகேஹட்டி பகுதியில் வசித்து வந்தவர் ஹர்ஷா. பஜ்ரங்தள பிரமுகரான இவர் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனால் சிவமொக்காவில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மேலும் ஹர்ஷாவின் இறுதி ஊர்வலத்தில் கலவரமும் வெடித்தது.

இதனால் சிவமொக்காவில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதுதொடர்பாக போலீசார் 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இக்கொலை வழக்கில் பழிக்குப்பழி வாங்க திட்டம் தீட்டியதாக 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

12 பேருக்கு ஜாமீன்

அவர்கள் சிவமொக்கா டவுன் சீகேஹட்டி பகுதியைச் சேர்ந்த ராக்கி, ஜெட்லி, நிதின், யஷ்வந்த், கார்த்திக், ஆகாஷ், பிரவீன், சுபாஷ், சச்சின் ராய்க்கர், சங்கேத், ரகு, மஞ்சு, விஷால் ஆகியோர் ஆவர். கைதான 13 பேர் மீதும் சிவமொக்கா தொட்டபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்

இந்த நிலையில் கைதான 13 பேரில் 12 பேர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி சிவமொக்கா மாவட்ட மற்றும் செசன்சு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி 12 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அவர்கள் 12 பேரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்