ஆதாரம் இன்றி ஊழல் புகார் கூறியவர்கள் மீது மானநஷ்ட வழக்கு; மந்திரி பி.சி.நாகேஸ் பேட்டி

ஆதாரம் இன்றி ஊழல் புகார் கூறியவர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்று மந்திரி பி.சி.நாகேஸ் கூறினார்.;

Update:2022-08-30 04:02 IST

பெங்களூரு:

பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எந்த விதமான ஆதாரங்களும் இல்லாமல் எனக்கு எதிராக தனியார் பள்ளிகள் சங்கத்தினர் ஊழல் குற்றச்சாட்டை கூறியுள்ளனர். பள்ளி கல்வித்துறையில் ஊழல் நடைபெறுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து எனது அலுவலகத்தில் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. பள்ளி கல்வித்துறை அதிகாரிகளின் அலுவலகத்திலும் புகார் கூறவில்லை. உரிய ஆதாரங்களுடன் புகார் கூறினால் அதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். எங்களிடம் நேரடியாக புகார் கொடுக்க முடியாவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடுக்கலாம்.


அல்லது விசாரணை அமைப்புகளிடம் புகார் கூறி விசாரணை நடத்துமாறு கோரலாம். பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவது, ஏற்கனவே வழங்கிய அனுமதியை நீட்டிப்பது போன்ற அனைத்து பணிகளும் வெளிப்படையாக நடைபெறுகின்றன. இந்த பணிகளை துரிதகதியில் முடிக்க ஆன்லைன் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிய பள்ளிகளை தொடங்க பொதுப்பணி மற்றும் தீயணைப்பு துறையின் அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக தனியார் பள்ளி நிர்வாகிகள் கூறினர். அவர்களின் கோரிக்கைகளை சட்டப்படி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஆதாரம் இன்றி ஊழல் புகார் கூறியவர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும்.

இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்