"தமிழகத்தில் இருந்து வரும் அய்யப்ப பக்தர்கள் நிலக்கல்லில் ஓய்வெடுத்து மலையேற வேண்டும்" - கேரள மந்திரி வேண்டுகோள்
பக்தர்கள் நிலக்கல்லில் ஓய்வெடுத்து இளைப்பாறிய பிறகு மலையேற வேண்டும் என கேரள கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவனந்தபுரம்,
சபரிமலை மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு தினமும் பூஜை நடந்து வருகிறது. எனவே நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இவர்களில் தென் மாநில பக்தர்களே அதிகம்.
இந்தநிலையில் கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
"கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகள் பக்தர்களின் வருகை மிக குறைவாக இருந்தது. தற்போது கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரியில் இருந்து நீண்ட தூர பயணமாக பக்தர்கள் சபரிமலை வருகிறார்கள். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு ஓய்வு கிடைப்பது இல்லை.
இதனால் அப்படிப்பட்ட பக்தர்களுக்கு மலை ஏற்றம் சிரமமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு வெளி மாநிலங்களில் இருந்து நீண்ட தூரம் பயணம் செய்து வரும் பக்தர்கள் நிலக்கல்லில் வாகனங்களை நிறுத்தி விட்டு 2 அல்லது 3 மணி நேரம் இளைப்பாறிய பிறகு மலை ஏற்ற நடை பயணத்திற்கு தயாராக வேண்டும்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.