அயோத்தி ராமர் கோவில் செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள வண்ண விளக்குகள் திருட்டு

அயோத்தி ராமர் கோவில் செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள வண்ண விளக்குகள் திருடப்பட்டுள்ளது.;

Update:2024-08-14 09:19 IST

லக்னோ,

உத்தரபிரதேசம் அயோத்தியில் இந்து மத கடவுள் ராமர் கோவில் உள்ளது. இந்த கோவில் பிராண பிரதிஷ்டை கடந்த ஜனவரி 22ம் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து ராமர் கோவிலில் வழிபாடு செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து தினமும் ஆயிரக்கணக்கானோர் அயோத்தி ராமர் கோவில் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, அயோத்தி ராமர் கோவில் செல்லும் வழியில் ஆயிரக்கணக்கான வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 6 ஆயிரத்து 400 வண்ண விளக்குகளும், 96 லேசர் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் பராமரிப்பை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த விளக்குகளில் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் ஆகும்.

இந்நிலையில், அயோத்தி கோவில் செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்த வண்ண விளக்குகளில் 3 ஆயிரத்து 800 விளக்குகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 36 லேசர் விளக்குகளும் திருடப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் 19ம் தேதி கணக்கெடுப்பின்போது அனைத்து விளக்குகளும் இருந்த நிலையில் அதன்பின் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பாதிக்கும் மேற்பட்ட விளக்குகள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. திருடப்பட்ட வண்ண விளக்குகளின் மதிப்பு சுமார் 50 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்