இமாசலபிரதேச பாஜகவில் கோஷ்டி பூசல்: தேர்தல் முடிவுகளை பாதிக்கும் ஆடியோக்கள் வெளியானதால் சிக்கல்!
தேர்தலில் பாஜக எம்எல்ஏக்களுக்கு எதிராக அதிருப்தியாளர்கள் பல தொகுதிகளில் போட்டியிட்டனர்.
சிம்லா,
இயற்கை எழில் கொஞ்சும் இமாசலபிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்கு 68 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு நவம்பர் 12-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், இமாசலபிரதேச சட்டசபை தேர்தல் பாஜகவில் கோஷ்டி பூசலின் மையமாக மாறியுள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்த இமாசல பிரதேச தேர்தலில் பாஜக இரண்டாக உடைந்தது.
முதல்வர் ஜெய்ராம் தாக்கூரின் ஆதரவு மற்றும் எதிர்ப்பு பிரிவுகளாக மாறிய பாஜக தலைவர்கள் வேண்டுமென்றே அவருக்கு எதிராக கிளர்ச்சியாளர்களை பல இடங்களில் அமைத்துள்ளதாக ஆடியோக்கள் வலம் வருகின்றன. இது பாஜகவை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது.
சட்டசபை தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளர் ஜெய்ராம் தாக்கூரை ஆதரித்த எம்எல்ஏக்களுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் பல தொகுதிகளில் போட்டியிட்டனர். இவர்கள் அனைவரும் அக்கட்சியின் ஆதரவாளர்கள் என கருதப்படும் நிலையில், சமீபத்தில் வெளியான ஆடியோ கிளிப்களில், இவர்களை எதிரிகள் வேண்டுமென்றே தூக்கி நிறுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பாஜக தலைமையும் சிக்கலில் உள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க முயற்சித்து வரும் பாஜகவுக்கு இது தலைவலியாக மாறியுள்ளது. தேர்தல் சுமூகமாக முடிந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், பா.ஜ.,வில் கோஷ்டி பூசல் தலைதூக்கியதால், தேர்தல் முடிவுகளில் இது எந்த விளைவை ஏற்படுத்துமோ என்ற கவலையில் பாஜகவினர் உள்ளனர்.
மண்டி மாவட்டத்தில் உள்ள ஜோகிந்தர் நகர் தொகுதியிலும், சம்பாவில் உள்ள டல்ஹவுசியிலும், காங்க்ரா மாவட்டத்தில் உள்ள காங்க்ரா தொகுதியிலும் பாஜகவுக்கு சீட் கிடைக்காதவர்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்டதை இந்த ஆடியோ கிளிப்புகள் தெளிவுபடுத்துகின்றன. அதே நேரத்தில், காங்ரா மாவட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பது வழக்கமாக இருப்பதால், பாஜகவின் கவலை அதிகரித்து வருகிறது.
அடுத்த மாதம் 8-ந் தேதி குஜராத் சட்டசபை தேர்தல் வாக்குகளுடன் எண்ணப்படும். அன்று பிற்பகலில் இமாசலபிரதேசத்தை மீண்டும் பா.ஜ.க. ஆளுமா அல்லது அந்தக் கட்சியிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றுமா என தெரிய வந்து விடும்.