மல்லேசுவரம் தொகுதியில் மீண்டும்
மகுடம் சூடுவாரா அஸ்வத் நாராயண்?
கர்நாடகத்தில் படித்தவர்கள் அதிகம் வாழும் தொகுதியாக மல்லேசுவரம் தொகுதி விளங்குகிறது. இந்த தொகுதி பெங்களூரு மாநகரில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது பெங்களூரு வடக்கு நாடாளுமன்ற தொகுதியின் கீழ் வருகிறது. கடந்த 1957-ம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரையில் இந்த தொகுதி 14 தேர்தல்களை சந்தித்து இருக்கிறது. நடைபெற இருக்கும் தேர்தல் இந்த தொகுதி சந்திக்கும் 15-வது தேர்தல் ஆகும்.
இந்த தொகுதியில் பிராமணர் மற்றும் ஒக்கலிகர் சமுதாய மக்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். குறிப்பாக இந்த தொகுதியில் தமிழ் பேசும் பிராமணர்கள் தேர்தலில் ஒரு வேட்பாளரின் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கும் அளவிற்கு கணிசமாக வசிக்கிறார்கள்.
இந்த தொகுதியில் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த எம்.எஸ்.கிருஷ்ணா மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த
எம்.ஆர்.சீதாராம் ஆகியோர் தொடர்ந்து 2 முறை எம்.எல்.ஏ.வாகி இருந்துள்ளனர். அவர்களுக்கு அடுத்து தற்போது மந்திரியாக இருக்கும் பா.ஜனதாவைச் சேர்ந்த அஸ்வத் நாராயண் தொடர்ந்து 3 முறை அதாவது 2008, 2013 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் தொடர் வெற்றியை ருசித்துள்ளார் .
நடைபெற இருக்கும் தேர்தலிலும் பா.ஜனதா சார்பில் அஸ்வத் நாராயணே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அனூப் அய்யங்கார் களம் நிறுத்தப்பட்டு இருக்கிறார். இவர் புதுமுகம் ஆவார். ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரசாந்த் போட்டியிடுகிறார். ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் வேட்பாளர்கள் யாரும் அறிவிக்கப்படவில்லை. இவர்களை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
அஸ்வத் நாராயண் இத்தொகுதியில் பலம் வாய்ந்த தலைவராக திகழ்கிறார். அவர் இந்த தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அது அவருக்கு மிகவும் சாதகமாக பார்க்கப்படுகிறது. அவரை எதிர்த்து காங்கிரஸ் கடந்த 3 தேர்தல்
களிலும் வெவ்வேறு வேட்பாளர்களை களம் நிறுத்தியது. இருப்பினும் அவர்களால் அஸ்வத் நாராயணை தோற்கடிக்க முடியவில்லை. இந்த தொகுதியில் மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திகெரே, மல்லேசுவரம், சுப்பிரமணியநகர், காயத்திரி நகர், அரண்மனை நகர், காடு மல்லேசுவரம், ராஜ்மகால் ஆகிய 7 வார்டுகள் உள்ளன.
மொத்தம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 581 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 411 பேர் ஆண் வாக்காளர்கள் ஆவர், 1 லட்சத்து 11 ஆயிரத்து 164 பேர் பெண் வாக்காளர்கள் ஆவர். 6 பேர் 3-ம் பாலின வாக்காளர்கள் ஆவர். இவர்களுக்காக 213 வாக்குச்சாவடிகளை அமைக்க தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
'ஹாட்ரிக்' வெற்றியை ருசித்த அஸ்வத் நாராயண் மீண்டு இந்த தொகுதியில் மகுடம் சூடுவாரா? என்பது அடுத்த மாதம்(மே) 13-ந் தேதி தெரிந்து விடும்.
இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள்
மல்லேசுவரம் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 14 சட்டசபை தேர்தல்கள் நடந்துள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:-
ஆண்டு வெற்றி தோல்வி
1957 பார்த்தசாரதி(சுயே.)-10,552 குமரன்(காங்.)-8,866
1962 தேவய்யா(சுயே.)-8,097 கே.ஸ்ரீராமுலு(காங்.)-7,832
1967 எம்.எஸ்.கிருஷ்ணா(சி.பி.எம்)-12,977 டி.கே.டி கவுடா(காங்.)-11,641
1972 எம்.எஸ்.கிருஷ்ணா(இந்திய கம்யூனிஸ்டு) -31,925 ராம்தேவ்(சுயே.)-13,506
1978 ராம்தேவ்(ஜனதாகட்சி)-32,936 எம்.எஸ்.கிருஷ்ணா(இந்திய கம்யூனிஸ்டு)-20,918
1983 ராம்தேவ்(ஜனதாகட்சி)-43,083 கே.வி.ஆச்சார்(காங்.)-14,483
1985 எம்.ரகுபதி(ஜனதாகட்சி)-38,445 விஜயலட்சுமி ராம்பட்(காங்.)-16,746
1989 ஜீவராஜ் ஆல்வா(ஜனதாதளம்)-34,955 ராம்தேவ்(சுயே.)-31,285
1994 ஆனந்தநாயக்(ஜனதாதளம்)-43,772 சந்திரசேகர்(பா.ஜனதா)-19,142
1999 சீதாராம்(காங்)-39,864 ரகுபதி(ஜக்கிய ஜனதாதளம்)-21,829
2004 சீதாராம்(காங்)-47,029 அஸ்வத் நாராயண்(பா.ஜனதா)-37,252
2008 அஸ்வத் நாராயண்(பா.ஜனதா)-53,794 சீதாராம்(காங்.)-45,611
2013 அஸ்வத் நாராயண்(பா.ஜனதா)-57,609 சிவராம்(காங்.)-36,543
2018 அஸ்வத் நாராயண்(பா.ஜனதா)83,130 கெங்கல் ஸ்ரீபதரேணு(காங்.)29,130