மறுவாழ்வு மையத்தில் வாலிபர் மீது தாக்குதல் -போலீசார் வழக்கு பதிவு
பெங்களூருவில் குடிபோதையில் இருந்து மீள்வதற்காக அனுமதிக்கப்பட்ட வாலிபரை அடித்து, துன்புறுத்தியதில் அவரது கால் முறிந்தது. இதுதொடர்பாக தனியார் மறுவாழ்வு மையம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;
பெங்களூரு:-
வாலிபரை அடித்து, துன்புறுத்தல்
பெங்களூரு காமாட்சி பாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் பிரவீன். இந்த வாலிபருக்கு திருமணமாகி விட்டது. பிரவீன் வேலைக்கு எங்கும் செல்லாமல் மதுஅருந்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் மதுவுக்கு அடிமையாகி இருந்தார். இதையடுத்து, மது பழக்கத்தில் இருந்து பிரவீனை மீட்க மனைவி மற்றும் குடும்பத்தினர் முடிவு செய்தார்கள்.
இதற்காக காமாட்சி பாளையா அருகே சுங்கதகட்டேயில் உள்ள ஒரு தனியார் மறுவாழ்வு மையத்தில் பிரவீனை, அவரது குடும்பத்தினர் அனுமதித்தனர். குடிபோதையில் இருந்து பிரவீனை மீட்க உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று மறுவாழ்வு மையத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்து இருந்தனர். மறுவாழ்வு மையத்தில் தங்கி இருந்த பிரவீனை, அங்கிருந்த ஊழியர்கள் தினமும் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
மறுவாழ்வு மையம் மீது வழக்கு
ஊழியர்கள் தாக்கியதில் பிரவீன் கால் முறிந்திருந்தது. இதனால் நடந்து செல்ல கூட அவர் சிரமப்பட்டார். இதுபற்றி தனது மனைவிக்கு அவர் தகவல் தெரிவித்தார். உடனே பிரவீனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் விரைந்து வந்து மறுவாழ்வு மையத்தில் இருந்து பிரவீனை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில நாட்கள் அங்கேயே இருந்தால் மறுவாழ்வு மைய ஊழியர்கள், என்னை அடித்து, தாக்கி கொலையே செய்திருப்பார்கள் என்று பிரவீன் கூறினார்.
அதே நேரத்தில் குடிப்பழக்கத்தில் இருந்து மீள்வதற்காக வருபவர்களை மறுவாழ்வு மையத்தினர் அடித்து துன்புறுத்துவதை கண்டித்து கன்னட அமைப்பினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து கன்னட அமைப்பினரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பிரவீன் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் மறுவாழ்வு மைய நிர்வாகிகள் மீது காமாட்சி பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.