நிம்மதியாக தூங்கி ஒரு மாதமாகிறது; வீடுகள் நீருக்கடியில் உள்ளன - கண்ணீர் வெள்ளத்தில் அசாம் மக்கள்!

அசாம் மாநிலத்தில் வெள்ள நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது.

Update: 2022-07-02 10:10 GMT

கவுகாத்தி,

அசாமில் தொடர்ச்சியாக பல நகரங்களில் இந்த வாரம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

அசாம் வெள்ளத்திற்கு 28 மாவட்டங்களை சேர்ந்த 2,894 கிராமங்களில் வசிக்கும் 25.10 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அசாம் மாநிலத்தில் வெள்ள நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது. 30 மாவட்டங்களில் 29.7 லட்சத்துக்கும் அதிகமான உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூர்வாசியான சஞ்சய் மண்டல் என்பவர் தன் குடும்பத்தினருடன் முகாமில் உள்ளார். அவர் கூறியதாவது, "ஒரு மாதமாக நாங்கள் கிடைத்த இடங்களில் படுத்து தூங்கிறோம். எங்களின் பயிர்கள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டு விட்டன. எங்கள் வீடு தண்ணீருக்கு அடியில் உள்ளது" என்று வேதனையுடன் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சிகிச்சையளித்து வரும் டாக்டர் அமர் ஜோதி டேகா கூறுகையில், "நாங்கள் மக்களுடன் தொடர்பில் உள்ளோம். கர்ப்பிணிப் பெண்கள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சில நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்" என்றார்.


அசாமின் மோரிகானில் ஆற்றில் அரிப்பு ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். பார்பெட்ட மாவட்டத்தில் மட்டும், 26 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான விவசாய நிலப்பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதை போன்றதொரு பேரழிவை இதுவரை கண்டதில்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

"பெரும்பாலான விவசாயிகள் தினக்கூலிகளாக வேலை செய்கின்றனர். இப்போது பயிர்கள் அனைத்தும் நீரில் மிதக்கின்றன. உணவுக்கு என்ன செய்யப்போகிறோம் எனத் தெரியவில்லை . அரசு உதவவில்லை என்றால் செத்து மடிய வேண்டியது தான்" என்று ஒரு விவசாயி வேதனையுடன் தெரிவித்தார்.

கடந்த 1 வாரமாக விமானப்படை மூலம், 517 டன் நிவாரண பொருட்கள் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன. சி.ஆர்.பி.எப் வீரர்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் மழையால் வெள்ளம் சூழ்ந்தது. கடந்த 3 நாட்களாக பெய்த மழை, இன்னும் 3-4 நாட்களுக்கு தொடரும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், அவர்கள் தங்கள் குழந்தைகள் குடும்பத்துடன் வேறு வழியின்றி மாற்று இடம் நோக்கி நகர்ந்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில் கடந்த பல ஆண்டுகளாக, பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ள அரிப்பால் 4 ஆயிரம் சதுர கி.மீ நிலப்பரப்பு அரித்து செல்லப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இது கோவா நிலப்பரப்பை விட அளவில் அதிகம். அதாவது அசாம் மாநில நிலப்பரப்பில் 7.5 சதவீதம் அரித்து செல்லப்பட்டுள்ளது. இதற்கிடையே கர்பி அங்லாங் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.

பலர் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில், வெள்ளம் வடிந்தாலும் கூட, துயரம் வடியாத நிலைமையில் பாதிக்கப்பட்டோர் உள்ளனர்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இந்த ஆண்டில் மட்டும் 151 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய மாநில அரசுகளின் உதவியை எதிர்நோக்கியே பாதிக்கப்பட்டோர் உள்ளனர்.வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க பலர் முன்வர வேண்டும். 

Tags:    

மேலும் செய்திகள்