அசாம்: டெங்கு பரவலால் திபு நகரில் 5 நாட்களுக்கு அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
அசாமின் திபு நகரில் டெங்கு பரவலுக்கு 3 பேர் பலியான நிலையில் இன்று முதல் 5 நாட்களுக்கு அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்படுகின்றன.
கர்பி அங்லோங்,
அசாமில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் சுகாதார மந்திரி கேசப் மகந்தா தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவற்றில், திபு நகரில் தீவிர டெங்கு காய்ச்சல் பரவல் ஏற்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்து உள்ளனர். 20-க்கும் கூடுதலானோர் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனை முன்னிட்டு கர்பி அங்லோங் தன்னாட்சி கவுன்சில் சார்பில் விடப்பட்ட உத்தரவில், தீவிர டெங்கு காய்ச்சல் பரவலால், தடுப்பு நடவடிக்கையாக திபு நகராட்சி வாரியம் மற்றும் திபு பெருநகர பகுதிக்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் உள்பட அங்கன்வாடி நிலையிலுள்ள பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை அனைத்து கல்வி நிலையங்களும் 5 நாட்களுக்கு மூடப்படுகிறது.
இதன்படி இன்று முதல் வருகிற 12-ந்தேதி வரை இந்த விடுமுறை இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெங்கு பரவலை தடுக்க 10 குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. 20 ஆயிரம் பேரை கண்காணிக்க அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 1,422 வீடுகளில் நடந்த சோதனையில் 74 காய்ச்சல் பாதிப்பு கண்டவர்கள் கண்டறியப்பட்டு உள்ளனர். தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.