அயோத்தி ராமர் கோவிலில் அரவிந்த் கெஜ்ரிவால் சாமி தரிசனம்
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்துடன் இன்று அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.;
லக்னொ,
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாக ராமர் கோவில் கட்டப்பட்டு கடந்த மாதம் 22ம் தேதி சிலை பிரதிஷ்டை விழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அயோத்தி ராமரை வழிபட்டு வருகின்றனர். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு தனக்கு முறையான அழைப்பு வரவில்லை என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும் அவர் தனது குடும்பத்துடன் கோவிலுக்குச் செல்ல விரும்புவதாகவும், சில நாட்கள் கழித்து செல்ல இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் இன்று வந்தார். அவரை கோவில் அதிகாரிகள் வரவேற்று பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்ய அழைத்து சென்றனர். அவருடன் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானும் அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்தார். பின்னர் அனைவரும் சாமி தரிசனம் செய்தனர்.
ராமர் கோவிலில் பிரார்த்தனை செய்த பிறகு, அரவிந்த் கெஜ்ரிவால் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " குழந்தை ராமரை பிரார்த்தனை செய்த பிறகு விவரிக்க முடியாத அமைதியை உணர்ந்தேன். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருகிறார்கள், பிரார்த்தனை மேற்கொள்கின்றனர். அனைவரின் நலனுக்காகவும் நான் பிரார்த்தனை செய்தேன்." இவ்வாறு அவர் கூறினார்.