சிவமொக்காவில் கைதான பயங்கரவாதியின் தந்தை மாரடைப்பால் சாவு

சிவமொக்காவில் கைதான பயங்கரவாதியின் தந்தை மாரடைப்பால் பலியானார்.

Update: 2022-09-23 22:10 GMT

பெங்களூரு: சிவமொக்காவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக மங்களூருவை சேர்ந்த மாஷ் முனீர் அகமது என்பவர் கைது செய்யப்பட்டார். இவரது தந்தை முனீர் அகமது(வயது 57). கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகனை காணவில்லை எனவும், அவரை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் எனவும் கர்நாடக ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அப்போது, பயங்கரவாத வழக்கில் மாஷ் கைது செய்யப்பட்டது தெரிந்தும், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டதாக கோபம் கொண்ட நீதிபதி வீரப்பா, மனுதாரரான முனீர் அகமதுவுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் முனீர் அகமதுவுக்கு நேற்று மாலை நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரை, குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு டாக்டர் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் முனீர் அகமது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முனீர் அகமது மாரடைப்பால் உயிரிழந்ததாக டாக்டர் தெரிவித்தார். உயிரிழந்த முனீர் அகமது சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்தவர். மங்களூருவில் மீன் வியாபாரம் செய்து வந்தார். பயங்கரவாதத்துடன் தொடர்பில் இருப்பதாக மகன் மாஷ் முனீர் கைதானதால் மனமுடைந்து இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்