வன்முறை சம்பவங்கள் தொடரும் நிலையில் மணிப்பூரில் ராணுவ தளபதி ஆய்வு

மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் தொடரும் நிலையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து ராணுவ தளபதி மனோஜ் பாண்டே ஆய்வு செய்து வருகிறார்.

Update: 2023-05-27 21:00 GMT

70 பேர் சாவு

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், பெரும்பான்மையாக வசித்து வரும் 'மெய்தி' இன மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின மக்கள் கடந்த 3-ந்தேதி பேரணி நடத்தினர். இதில் வெடித்த கலவரம் படிப்படியாக மாநிலம் முழுவதும் பரவியது. இதில் 70-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

வன்முறையை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் துணை ராணுவப்படையினர், போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

தொடர்ந்து தாக்குதல்

எனினும் அங்கு முழுமையான அமைதி திரும்பவில்லை. மாநிலத்தின் பல இடங்களில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் மத்திய-மாநில மந்திரிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் வீடுகளை தாக்கி சூறையாடி வருகின்றனர். குறிப்பாக மலையடிவாரத்தில் உள்ள கிராமங்கள் மீது கடந்த சில நாட்களாக ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பதற்றம் நிறைந்த பகுதிகளில் இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே மாநிலம் முழுவதும் கலவரம் பாதிக்கப்பட்டு உள்ளதால் அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாநிலத்தை அடைவது தடைபட்டு இருக்கிறது.இதனால் இந்த பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உள்ளது. பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

ராணுவ தளபதி ஆலோசனை

இந்த நிலையில் மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து ஆய்வு செய்வதற்காக ராணுவ தளபதி மனோஜ் பாண்டே 2 நாள் பயணமாக நேற்று மணிப்பூர் சென்றார். கிழக்கு பிராந்திய தளபதி ராணா பிரதாப் காலிதாவுடன் சென்ற அவர், மாநில முதல்-மந்திரி, கவர்னர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகருடன் ஆலோசனை நடத்தினார். களத்தில் பாதுகாப்பு பணிகளை மேற்ெகாண்டு வரும் கமாண்டர்களுடனும் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் சர்ச்சைக்குரிய பகுதிகளில் அமைதியை நிலை நாட்டுவதற்கு தேவையான ஆலோசனைகளையும் ராணுவ அதிகாரிகளுக்கு அவர் வழங்கினார். 3 வாரங்களுக்கு மேலாக நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் முடிவுக்கு வராததால் மாநிலம் முழுவதும் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்