பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையை பற்றி மோடி ஏன் பேசுவது இல்லை தெரியுமா? ப.சிதம்பரம் தாக்கு

காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கு இணையாக பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை. அதனால்தான் மோடியும் மற்ற பாஜக தலைவர்களும் தங்கள் தேர்தல் அறிக்கையைப் பற்றி பேசுவதில்லை ப.சிதம்பரம் சாடியுள்ளார்.

Update: 2024-04-30 09:34 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் 2 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், 3-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் வரும் மே 7 ஆம் தேதி நடைபெறுகிறது. 12 மாநிலங்களில் உள்ள  97 தொகுதிகளுக்கு அன்றைய தினம் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில், பிரதமர் மோடியும் தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரதமர் மோடி தனது பிரசாரத்தில் காங்கிரசை கடுமையாக சாடி வருகிறார். குறிப்பாக, காங்கிரஸ் கட்சி 'பரம்பரை வரி' விதித்து மக்களின் சொத்துக்களை அபகரிக்க  திட்டமிட்டு இருப்பதாக  கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு காங்கிரஸ் கட்சியும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடி  பா.ஜனதா தேர்தல் அறிக்கை பற்றி பேசுவது இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ்' கணக்கில் ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது:-

"மராட்டிய மாநிலம் சோலாப்பூரில் பேசிய பிரதமர், நாட்டின் வளங்களில் பட்டியலின, பழங்குடியின, ஓ.பி.சி. மற்றும் ஏழைகளுக்கு முதல் உரிமை உள்ளது என்றார். அதேபோல பிரதமர் மன்மோகன் சிங் கடந்த  2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற  தேசிய வளர்ச்சி கவுன்சிலில் பேசும் போது இதையே கூறியிருந்தார். அந்தப் பட்டியலில் சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளை மன்மோகன் சிங் சேர்த்திருந்தார்.

ஆனால் மோடி ஏன் சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளை மறந்துவிட்டார்?... நாட்டில் ஏழை சிறுபான்மையினர், ஏழைப் பெண்கள் மற்றும் ஏழை குழந்தைகளே இல்லையா? தேசத்தின் வளங்களில் ஏழைகள் முதல் உரிமை கோருவதுதான் சரியானது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வேலை, வளம், மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கு இணையாக பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை. அதனால்தான் மோடியும் மற்ற பா.ஜனதா தலைவர்களும் தங்கள் தேர்தல் அறிக்கையைப் பற்றி பேசுவதில்லை. பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை சுவடு தெரியாமல் காணாமல் போனது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கோடிக்கணக்கான மக்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்