நிரவ் மோடியும், விஜய் மல்லையாவும் மோடியின் குடும்பத்தினரா? டெல்லியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

மோடியின் உண்மையான குடும்பம் என்ற தலைப்பும், போஸ்டரின் மையத்தில், பிரதமர் மோடியின் படமும் இடம் பெற்றிருந்தன.

Update: 2024-03-06 11:38 GMT

புதுடெல்லி,

பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ.12,500 கோடிக்கும் கூடுதலாக கடன் வாங்கி விட்டு, அதனை திருப்பி செலுத்துவதற்கு பதிலாக வெளிநாட்டுக்கு தப்பியோடினார் நிரவ் மோடி. இதேபோன்று, தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள வங்கிகளில் ரூ.9 ஆயிரம் வரை கடன் பெற்று விட்டு, அதனை திருப்பி செலுத்தவில்லை.

இந்நிலையில், தேடப்படும் நபர்களின் பட்டியலில் உள்ள அவர் லண்டனுக்கு தப்பினார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், வெளிநாடுகளுக்கு தப்பியோடிய நிரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா போன்ற தொழிலதிபர்களுடன் பிரதமர் மோடி இருப்பது போன்ற போஸ்டர்கள், மத்திய டெல்லியின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டு இருந்தன.

அந்த போஸ்டர்களில் வைர வியாபாரியான நிரவ் மோடி, மற்றொரு வியாபாரி மெகுல் சோக்சி, லலித் மோடி உள்ளிட்ட தொழிலதிபர்களுடன் பா.ஜ.க.வை சேர்ந்த பிரிஜ் பூஷண் சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் படங்களும் இடம் பெற்றிருந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அதில், மோடியின் உண்மையான குடும்பம் என்ற தலைப்பும், அதன் மையத்தில், பிரதமர் மோடியின் படமும் இடம் பெற்றிருந்தன. அந்த போஸ்டர்களின் அடியில், பாரதீய இளைஞர் காங்கிரஸ் என்ற பெயரும் இருந்தது.

இதுபற்றி புதுடெல்லி நகராட்சி கவுன்சில் அதிகாரி ஒருவர் அளித்த புகாரின்பேரில், அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக துக்ளக் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது.

டெல்லி சொத்துகள் அழிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், அந்த போஸ்டர்களும் நீக்கப்பட்டு உள்ளன. இதுபற்றி போலீசார் கூறும்போது அந்த போஸ்டர்களில் வெளியீட்டாளர் அல்லது அதனை வைத்தவர்களின் பெயர்கள் இல்லை என தெரிவித்தனர்.

கடந்த திங்கட்கிழமை பிரதமர் மோடி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, 140 கோடி இந்தியர்களும் தன்னுடைய குடும்பமே என்று கூறினார். ராஷ்டீரிய ஜனதாதள கட்சியின் தலைவர் லாலு பிரசாத், குடும்பம் இல்லாதவர் என பிரதமரை குறிப்பிட்டு கூறினார். அதற்கு பதிலடியாக பிரதமர் மோடி நாட்டு மக்களை தன்னுடைய குடும்பம் என கூறினார்.

இதன் தொடர்ச்சியாக, சமூக ஊடகத்தில் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள் பலரும் சமூக ஊடகத்தின் முகப்பு பக்கத்தில் தங்களுடைய பெயருக்கு பின்னால், மோடியின் குடும்பம் என சேர்த்தனர்.

இந்த நிலையில், வெளிநாடுகளுக்கு தப்பியோடிய நிரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா போன்ற தொழிலதிபர்களும் பிரதமர் மோடியின் இந்த குடும்பத்தில் உள்ளனரா? என்று காங்கிரஸ் கட்சி நேற்று கேள்வி எழுப்பியிருந்தது கவனிக்கத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்