சந்திரபாபு நாயுடு மகன் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம்: தேர்தல் ஆணையரிடம் தெலுங்கு தேசம் கட்சி புகார்

ஆந்திராவில் மே 13-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது.

Update: 2024-04-13 05:38 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஆந்திராவில் மே 13-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.பி. கனகமேடலா ரவீந்திர குமார், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஆந்திர மாநில அரசு உத்தரவின்பேரில், சில போலீஸ் அதிகாரிகள், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், கட்சி பொதுச்செயலாளருமான நாரா லோகேஷின் செல்போனை 'பெகாசஸ்' மென்பொருளை பயன்படுத்தி ஒட்டு கேட்கின்றனர்.

இதுதொடர்பாக 'ஆப்பிள்' செல்போன் நிறுவனம், நாரா லோகேஷை உஷார்படுத்தி உள்ளது. கடந்த மார்ச் மாதமும் இதே எச்சரிக்கை வந்தது.

மாநில போலீஸ் டி.ஜி.பி.யும், உளவுத்துறை தலைவரும் மாநில அரசின் வேலைக்காரர்களாக செயல்படுகிறார்கள். அவர்களை நீக்கிவிட்டு, நடுநிலையான அதிகாரிகளை நியமித்து, நேர்மையான தேர்தலுக்கு வழிவகுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்