நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து: மராட்டியத்திலும் ஒருவர் கொடூர கொலை

பா.ஜனதா முன்னாள் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

Update: 2022-07-03 03:14 GMT

மும்பை,

பா.ஜனதா முன்னாள் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இவருக்கு ஆதரவாக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் சமூகவலைதளங்களில் கருத்து வெளியிட்டு வந்த கன்னையா லால் என்ற டெய்லர் கடந்த மாதம் 28-ந் தேதி கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார்.

இந்தநிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் டெய்லர் கன்னையா லால் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே, மராட்டியத்தில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் கருத்து கூறிய மருந்து கடைக்காரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

இங்குள்ள அமராவதியில் மருந்து கடை நடத்தி வந்தவர் உமேஷ் கோல்கே (வயது54). இவர் நுபுர் சர்மாவின் பேச்சுக்கு ஆதரவாக சில வாட்ஸ்அப் குழுக்களில் பதிவிட்டு உள்ளார். இதில் அவர் சில இஸ்லாமியர்கள் உள்பட அவரது வாடிக்கையாளர்கள் உள்ள குழுவிலும் தெரியாமல் அந்த பதிவை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இது அந்த பகுதியில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் இர்பான் கான் (30) என்பவருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவர் தலா ரூ.10 ஆயிரம் கொடுத்து 5 கூலிப்படையினர் மூலம் உமேஷ் கோல்கேயை கொலை செய்து உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அமராவதியை சேர்ந்த தினக்கூலிகளான முதாசீத் அகமத் (22), ஷாருக்கான் பதான் (25), அப்துல் தவுபிக் (24), சோயிப் கான் (22), அட்லிப் ரசீத் (22) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான இர்பான் கானையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்