தொடர் அட்டகாசம் செய்த மேலும் ஒரு யானை பிடிபட்டது

மூடிகெேரயில் தொடர் அட்டகாசம் செய்து வந்த ேமலும் ஒரு யானை பிடிபட்டது. கும்கிகள் உதவியுடன் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2022-12-03 18:45 GMT

சிக்கமகளூரு:

தொடர் அட்டகாசம்

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவில் குந்தூர், பெலகோடு கிராமங்களில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் தொடர் அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த மாதம் குந்தூர் கிராமத்தில் ஷோபா என்ற பெண்ணை காட்டு யானை தாக்கி கொன்றது. இதனால் குந்தூர் மற்றும் சுற்றவட்டார பகுதிகளில் தொடர் அட்டகாசம் செய்து வரும் 3 யானைகளை பிடிக்க மாநில அரசிடம் வனத்துறையினர் அனுமதி கேட்டிருந்தனர். மாநில அரசும் 3 யானைகளை பிடிக்க அனுமதி வழங்கியது.

இதையடுத்து வனத்துறையினர் அபிமன்யு உள்ளிட்ட 6 கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானைகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குந்தூர் பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானையை கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். அந்த யானை தற்போது சிவமொக்கா சக்ரேபைலு யானைகள் பயிற்சி முகாமில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஒரு யானை பிடிபட்டது

இதையடுத்து மேலும் 2 யானைகளை பிடிக்க 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். கடந்த 4 நாட்களாக 2 யானைகளையும் வனப்பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பெலகோடு கிராமத்தையொட்டி உள்ள காபி தோட்டத்தில் ஒரு யானை சுற்றித்திரிவது வனத்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து கும்கி யானைகள் உதவியுடன் அந்தப்பகுதிக்கு வனத்துறையினர் விரைந்து சென்றனர்.

அப்போது கும்கி யானைகள், வனத்துறையினரை கண்டதும் காட்டு யானை வனப்பகுதிக்குள் ஓட முயன்றது. அப்போது வனத்துறையினர் கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். மயக்க ஊசி செலுத்தியதும் சிறிது தூரம் ஓடிய காட்டு யானை மயங்கி விழுந்தது. இதையடுத்து அந்த யானைக்கு கயிறு கட்டிய வனத்துறையினர், அது மயக்கம் தெளிந்து எழுந்ததும், கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர்.

கடைசி யானை

அந்த காட்டு யானையை குடகு மாவட்டம் துபாரே யானைகள் பயிற்சி முகாமில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர் அட்டகாசம் செய்து வந்த 2 காட்டு யானைகளை வனத்துறையினர் பிடித்துள்ளனர். மேலும் யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று ஒருநாள் ஓய்வு எடுத்துவிட்டு நாளை முதல் கடைசி யானையை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்