தேர்தலையொட்டி கவர்ச்சிகர இலவச திட்டங்கள் அறிவிப்பு - மத்திய பிரதேசம், ராஜஸ்தான் அரசுகள் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
இலவச திட்டங்கள் அறிவிப்பு தொடர்பாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில அரசுகள் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
புதுடெல்லி,
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பட்டுலால் ஜெயின் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்குகளைப் பெறுவதற்காக மக்களின் வரிப்பணத்தை கொண்டு கவர்ச்சிகரமான இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருவதாகவும், இதனை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இதையடுத்து இந்த மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.