குவைத்தில் இருந்து ஆந்திரா வந்த இளம்பெண்ணுக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு

இந்தியாவில் நேற்றுவரை 3 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது 5 ஆக உயர்ந்து உள்ளது.

Update: 2022-12-22 07:00 GMT

விஜயவாடா

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீர் எழுச்சி பெற்று பரவி வருகிறது. இதற்கு காரணம், ஒமைக்ரானின் பிஎப்.7 துணை வைரஸ்கள்தான்.

இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்றுதான் என சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது.

இந்த வைரஸ், சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பரவி விட்டது.

இந்த பிஎப்.7 வைரஸ், இந்தியாவிலும் நுழைந்துவிட்டது. குஜராத்தில் கடந்த அக்டோபர் மாதம் 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. ஒடிசாவிலும் அந்த வைரஸ் ஒருவருக்கு பாதித்துள்ளது.ஜூலை, செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இந்தியாவில் நேற்றுவரை 3 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.தற்போது 5 ஆக உயர்ந்து உள்ளது.

ஆந்திர மாநிலம் அயனவள்ளி, நெடுநூரி சவரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் குவைத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 19-ந்தேதி குவைத்தில் இருந்து விமான மூலம் விஜயவாடா கண்ணவரம் விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார்.

விமான நிலையத்தில் இருந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் இளம்பெண்ணுக்கு கொரோனா தொற்று உள்ளதா என ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இளம்பெண் தனது குடும்பத்தினருடன் காரில் வீட்டிற்கு சென்றார். நேற்று மாலை பரிசோதனை முடிவில் இளம்பெண்ணுக்கு புதிய வகை ஒமைக்ரான் தொற்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இளம்பெண்ணை கோண சீமா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இளம்பெண்ணின் குடும்பத்தாரையும் தனிமைப்படுத்தி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

இளம்பெண்ணின் குடும்பத்தார் யார் யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணிற்கு புதிய வகை கொரோனா தொற்று பரவி உள்ளதால் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்