இமாசல பிரதேச காங்கிரசின் தலைவர் பதவியில் இருந்து ஆனந்த் சர்மா விலகல்

இமாசல பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ஆனந்த் சர்மா விலகியுள்ளது கட்சியில் சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-08-21 13:40 GMT



சிம்லா,



ஜம்மு மற்றும் காஷ்மீரின் காங்கிரஸ் பிரசார கமிட்டி தலைவராக கடந்த 16-ந்தேதி, அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டார். எனினும், ஒரு சில மணிநேரத்தில் அந்த பதவியில் இருந்து அவர் விலகினார். இது காங்கிரசில் சலசலப்பு ஏற்படுத்தியது.

இது நடந்து 5 நாட்களுக்குள் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இமாசல பிரதேச காங்கிரஸ் கட்சியின் பிரசார குழு தலைவர் பதவிக்கு முன்னாள் மத்திய மந்திரியான காங்கிரசை சேரந்த ஆனந்த் சர்மா நியமிக்கப்பட்டார்.

எனினும், அந்த பதவியில் இருந்து ஆனந்த் சர்மா விலகியுள்ளார். இது கட்சியில் மீண்டும் மற்றொரு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தனது சுயமரியாதை விவாதத்திற்கு உரியது அல்ல என தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து டுவிட்டரில் ஆனந்த் சர்மா வெளியிட்டுள்ள செய்தியில், இமாசல பிரதேச பிரசாரத்திற்கான காங்கிரஸ் கட்சியின் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து கனத்த மனதுடனேயே நான் ராஜினாமா செய்துள்ளேன்.

வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ்காரர் என நான் மீண்டும் வலியுறுத்தி கொள்வதுடன், எனது நம்பிக்கையில் தொடர்ந்து உறுதியாக இருப்பேன் என தெரிவித்து கொள்கிறேன். எனது ரத்தத்தில் காங்கிரசின் கொள்கைகள் ஓடுகின்றன.

அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். எனினும், தொடர்ச்சியான புறக்கணிப்பு மற்றும் புண்படுத்துதல்கள் ஆகியவற்றால், சுயமரியாதை கொண்ட ஒரு நபராக, வேறு வாய்ப்பு இன்றி இந்த முடிவை எடுத்துள்ளேன் என அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்