ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரை ஊக்கம் அளிக்கிறது - பிரதமர் மோடி
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரை ஊக்கம் அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு நாளை பதவியேற்க உள்ளார். புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு வழிவிட்டு மாளிகையிலிருந்து ராம்நாத் கோவிந்த் இன்று வெளியேறுகிறார். இந்நிலையில், நாட்டு மக்களிடையே ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், " 5 வருடங்களுக்கு முன்பு உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மூலம் நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஜனாதிபதியாக எனது பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. உங்களுக்கும் உங்கள் மக்கள் பிரதிநிதிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எந்தவித பேதமும் இன்றி அனைவருக்கும் அடிப்படை வசதி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள். 21-ம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்ற நாடு தயாராகி வருகிறது என்பதை உறுதியாக நம்புகிறேன்.
நமது இயற்கை ஆழ்ந்த வேதனையில் உள்ளது. காலநிலை நெருக்கடி இந்த கிரகத்தின் எதிர்காலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். நமது குழந்தைகளின் நலனுக்காக நமது சுற்றுச்சூழல், நிலம், காற்று மற்றும் நீர் ஆகியவற்றை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நமது அன்றாட வாழ்க்கையில் மரங்கள், ஆறுகள், கடல்கள், மலைகள் மற்றும் மற்ற அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முதல் குடிமகனாக, சக குடிமக்களுக்கு நான் ஒரு அறிவுரை கூற வேண்டும் என்றால், அது இதுவாகதான் இருக்கும் என்று ராம்நாத் கோவிந்த் கூறினார்.
இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரை ஊக்கம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரை எழுச்சியூட்டும் வகையில் இருந்தது. அவரது கருத்துக்கள், தேசிய முன்னேற்றத்திற்கான அவரது ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. நமது ஜனாதிபதியாக அவர் தேசத்திற்கு சேவை செய்த உணர்வை பிரதிபலிக்கிறது" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.