ஐக்கிய ஜனதா தள கட்சியுடனான முறிவுக்கு பின் முதன்முறையாக அமித்ஷா பீகார் பயணம்
ஐக்கிய ஜனதா தள கட்சியுடன் ஏற்பட்ட முறிவுக்கு பின்பு முதன்முறையாக மத்திய மந்திரி அமித்ஷா பீகாருக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
பாட்னா,
பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சி, பா.ஜ.க.வுடன் அமைத்திருந்த கூட்டணியை கடந்த ஆகஸ்டில் முறித்து கொண்டது. முதல்-மந்திரி பதவியையும் ராஜினாமா செய்த நிதிஷ் குமார், தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் எட்டாவது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்று கொண்டார்.
இந்நிலையில், ஐக்கிய ஜனதா தள கட்சியுடனான முறிவுக்கு பின்பு முதன்முறையாக, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பீகாருக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன்படி, வருகிற 23 மற்றும் 24 ஆகிய 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மந்திரி அமித்ஷா, இந்த பயணத்தில் ஒரு பெரிய பொது கூட்டத்திலும் கலந்து கொள்கிறார்.
இதுபற்றி பீகார் பா.ஜ.க. தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறும்போது, பீகாருக்கு ஜூலை 31-ந்தேதி அமித்ஷா வந்தபோதே, இந்த பயணத்திற்கான திட்டமிடல் இறுதி செய்யப்பட்டு விட்டது. பீகாரில் அரசுடனான கூட்டணி முறிவுக்கு பின்பு முதன்முறையாக பொது கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றுகிறார் என தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று பீகாருக்கான நிதி ஒதுக்கீடு பற்றிய புதிதாக உருவான அரசின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த ஜெய்ஸ்வால், பீகாருக்கு மத்திய அரசு அதிக உதவிகளை செய்து வருகிறது.
பெரிய மாநிலம் மராட்டியத்திற்கு ரூ.51 ஆயிரம் கோடி கொடுக்கப்பட்டு உள்ளது. பீகாருக்கு ரூ.82 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் ரூ.31 ஆயிரம் கோடி பீகாருக்கு முன்பே வழங்கப்பட்டு விட்டது. இப்படி இருக்கும்போது, பீகார் அரசு பொய்யான குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருகிறது என கூறியுள்ளார்.