பிரதமர் மோடி ஆட்சியில் பயங்கரவாத சம்பவங்கள் 80 சதவீதம் குறைந்தது - அமித்ஷா

பிரதமர் மோடி ஆட்சியில் பயங்கரவாதம், கிளர்ச்சி சம்பவங்கள் மற்றும் இடதுசாரி தீவிரவாதம் போன்றவை 80 சதவீதம் அளவுக்கு குறைந்திருப்பதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பெருமிதத்துடன் கூறியுள்ளார்.;

Update:2023-02-18 23:37 IST

இடதுசாரி தீவிரவாதம்

மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்த சுதந்திர போராட்ட வீரர் ஜவஹர்லால் டார்டாவின் நூற்றாண்டு பிறந்த தின விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியதாவது:-

மோடி ஆட்சிக்கு முன்பு வரை காஷ்மீர், வடகிழக்கு மற்றும் இடதுசாரி தீவிரவாதத்தால் உள்நாட்டு பாதுகாப்பு சவால்களை சந்தித்து வந்தது. ஆனால் பிரதமர் மோடி ஆட்சியில் இன்று காஷ்மீர் பயங்கரவாதம், வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சி, இடதுசாரி தீவிரவாதம் போன்றவை 80 சதவீதம் அளவுக்கு குறைந்திருப்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

காஷ்மீரில் முதலீடு

காஷ்மீர் பள்ளத்தாக்கு ஓராண்டில் மட்டும் 1.8 கோடி சுற்றுலா பயணிகளை பார்த்திருக்கிறது. இது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. மாநிலத்தில் கடந்த 70 ஆண்டுகளில் ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கே முதலீடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஆனால் மோடி ஆட்சியில் வெறும் 3 ஆண்டுகளில் மட்டுமே ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு பெறப்பட்டு உள்ளது.

காஷ்மீரில் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு மற்றும் மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது. இது மிகப்பெரிய மாற்றம் ஆகும். இதைப்போல வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சி சம்பவங்கள் கணிசமாக குறைந்திருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் 60 சதவீத பகுதிகளில் சர்ச்சைக்குரிய ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் திரும்ப பெறப்பட்டு உள்ளது.

உலக அளவில் முதலிடம்

உலக அளவில் இந்தியாவை முதலிடத்தில் கொண்டு செல்வதே பிரதமர் மோடியின் நோக்கம் ஆகும். ராணுவ தளவாட உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையின் கீழ் உற்பத்தி மையமாக மாறி வருகிறது.

மக்களுக்கு பலனளிக்கக்கூடிய முடிவுகளை அரசு எடுத்து வருகிறது. அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் ஹைட்ரஜன் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக இந்தியா மாறும். அதேபோல், செயற்கைக்கோள் துறையில் இந்தியா இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் முன்னேறும்.

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி மேற்கொண்ட முயற்சிகள் சிறப்பானவை. பொது முடக்கத்துக்கு அவர் விடுத்த அழைப்புக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது.

முன்னதாக, வாரத்துக்கு ஒரு முறை ஒருவேளை உணவை துறக்குமாறு முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி விடுத்த அழைப்புக்கு மக்கள் ஆதரவு அளித்து இருந்தனர். அந்தவகையில் சாஸ்திரிக்குப்பின் மக்கள் ஆதரிக்கும் தலைவராக மோடி உள்ளார்.

இவ்வாறு உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்