மியான்மர் உடனான இந்தியாவின் எல்லை விரைவில் பாதுகாக்கப்படும் - அமித் ஷா

மியான்மரில் சண்டை தீவிரமடைந்ததால் அங்கிருந்து தப்பிய ராணுவ வீரர்கள் பலர் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர்.

Update: 2024-01-20 17:05 GMT

கோப்புப்படம்

கவுகாத்தி,

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே ராணுவத்துக்கும், ஆயுதமேந்திய கிளர்ச்சி குழுவினருக்குமிடையே தொடர்ந்து சண்டை நடக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3 இன சிறுபான்மை ஆயுதக்குழுவினர் ஒருங்கிணைந்த தாக்குதலை தொடங்கின.

இந்த தாக்குதலில் சில நகரங்கள் மற்றும் ராணுவ நிலைகளைக் கைப்பற்றினர். இதனால் அங்கிருந்த ராணுவ வீரர்கள் தப்பி ஓடினர். இந்நிலையில், சண்டை தீவிரமடைந்ததால் மியான்மரில் இருந்து தப்பிய ராணுவ வீரர்கள் பலர் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர். மியான்மரின் ரக்கினே மாநிலத்தில் உள்ள ராணுவ முகாம்களை கிளர்ச்சிக்குழுவினர் கைப்பற்றியதால் இந்தியாவுக்கு தப்பி வந்த சுமார் 600 ராணுவ வீரர்கள், எல்லையோர மாநிலமான மிசோரமின் லாங்திலாய் மாவட்டத்தில் தஞ்சம் புகுந்திருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அவர்கள் அசாம் ரைபிள் படையினரின் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வீரர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு மிசோரம் அரசு தகவல் தெரிவித்துள்ளது. மியான்மர் வீரர்களை விரைவில் திருப்பி அனுப்புவதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது. ஷில்லாங்கில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தின்போது, மிசோரம் முதல்-மந்திரி லால்துஹோமா மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இருவரும் இதுபற்றி அவசர பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் மீண்டும், மியான்மர் எல்லையில் வேலி அமைக்கப்படும் என்றும், இந்தியாவுக்குள் சுதந்திரமாக வருவது முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கவுகாத்தியில் பேசிய அவர், "வங்கதேச எல்லையைப் போல் மியான்மர் உடனான இந்தியாவின் எல்லை விரைவில் பாதுகாக்கப்படும்.. வங்கதேசம் உடனான எல்லையை எப்படி வேலி அமைத்து இப்போது பாதுகாத்து வருகிறோமோ அதுபோல மியான்மர்- இந்திய எல்லையிலும் வேலி அமைக்க நரேந்திர மோடி அரசு முடிவு செய்துள்ளது. மியான்மர் எல்லையில் வசிக்கும் மக்கள் கட்டுப்பாடு இல்லாமல் இந்தியா வரலாம் என்ற உடன்படிக்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து வருகிறது, இந்தியாவுக்குள் சுதந்திரமாக வருவது முடிவுக்கு கொண்டுவரப்படும்" என்று அமித்ஷா தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்