உத்தரபிரதேசத்தில் ஆம்புலன்ஸ்-லாரி மோதல்; 3 பெண்கள் உள்பட 7 பேர் சாவு

உத்தரபிரதேசத்தில் ஆம்புலன்ஸ், லாரி மோதிய விபத்தில் 3 பெண்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Update: 2022-05-31 21:58 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தின் பரேலி மாவட்டம் பகாத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குர்ஷித். இவர், டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவியை ஓர் ஆம்புலன்சில் அழைத்துக்கொண்டு சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். குர்ஷித்தின் சகோதரி, இரு மகன்கள், ஒரு மகள் ஆகியோர் ஆம்புலன்சில் உடன் சென்றனர்.

பதேகஞ்ச் பாசிம் பகுதியில் ஆம்புலன்ஸ் வந்துகொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பை உடைத்துக்கொண்டு எதிர்ப்புற சாலைக்குள் சென்றது. அப்போது அந்த சாலையில் வேகமாக வந்த ஒரு லாரி மீது மோதியது.

இந்த பயங்கர விபத்தில் ஆம்புலன்ஸ் அப்பளமாக நொறுங்கியது. அதில், ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட அதில் சென்ற 7 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். அவர்களின் உடல்களை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஆம்புலன்ஸ் டிரைவரின் தூக்கக் கலக்கத்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்