பா.ஜ.க.வுக்கு எதிரான ஊழல்வாதிகளின் கூட்டணி சீட்டு கட்டுப்போல் சரியும் - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்

பா.ஜ.க.வுக்கு எதிரான ஊழில்வாதிகளின் கூட்டணி சீட்டு கட்டுப்போல் சரியும் என மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் சாடினார்.

Update: 2023-06-24 17:29 GMT

எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் திரட்டி மெகா கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பீகார் தலைநகர் பாட்னாவில் 15 கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக ஆலோசனை நடத்தினர். மீண்டும் வருகிற 12-ந் தேதி இமாசலபிரதேச தலைநகர் சிம்லாவில் அடுத்த ஆலோசனை கூட்டத்தை நடத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் அரியானா மாநிலம் பானிபட் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான அனுராக் தாக்கூர், எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்க முயல்வது குறித்து கடுமையாக சாடினார். இது குறித்து அவர் பேசியதாவது:-

ஊழல்வாதிகளின் கூட்டணி

அவர்கள் (எதிர்க்கட்சி தலைவர்கள்) ஒன்று சேர்ந்தாலும், அவர்களின் இதயங்கள் சேரவில்லை. அவர்களுக்குத் தலைவரோ, கொள்கைகளோ இல்லை, அவர்களின் நோக்கங்களும் தூய்மையானதாக இல்லை.

ஊழல்களை உருவாக்கும் ஊழல்வாதிகளின் கூட்டணியை தேர்ந்தெடுக்க வேண்டுமா அல்லது நாட்டுக்கு சேவை செய்த நேர்மையான தலைவரை தேர்ந்தெடுப்பதா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.

பாட்னாவில் நடந்த சந்திப்பு நகைச்சுவையை தவிர வேறொன்றுமில்லை. 2024 தேர்தலுக்கு முன், இந்த நாடக நிறுவனம் ஒன்று கூடி மேடை அலங்கரிக்கப்பட்டு, கதாபாத்திரங்கள் முடிவு செய்யப்பட்டு வருகின்றன. ஒரு நாடகம் நடக்கும். எல்லோரும் ஆதரவாகப் பேசுவார்கள். ஆனால் மக்கள் அவர்களை பார்த்து சிரிப்பார்கள். கடந்த முறை செய்தது போல் இந்த ஊழல்வாதிகளை வீட்டில் உட்கார வைப்பார்கள்.

சீட்டுக்கட்டு போல் சரியும்

கூட்டணிக்கு யார் தலைவர் என்பது குறித்து எதிர்க்கட்சிகள் பதிலளிக்கவில்லை. ராகுல் காந்தியின் திருமண முன்மொழிவு மட்டுமே கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணி சீட்டுக்கட்டு போல் சரிந்து விடும். 70 ஆண்டுகளில் காங்கிரசால் செய்ய முடியாததை, மோடி அரசு 9 ஆண்டுகளில் செய்தது. மோடி அரசு ஊழலற்ற ஆட்சியை வழங்கி வருகிறது. அவரது தலைமையில் நாட்டின் கவுரவம் உலகளவில் உயர்ந்துள்ளது. இன்று, உலகில் 'மோடி, மோடி' என்று மட்டுமே எதிரொலிக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஓநாய்களின் கூட்டம்

இதனிடையே மத்தியபிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையில், "வெள்ளத்தின் போது பல விலங்குகள் தங்கள் உயிரைக் காப்பாற்ற ஒரு மரத்தில் ஒன்றாக அமர்ந்திருக்கும். அதுபோல் தான் பிரதமர் நரேந்திர மோடியின் புகழின் வெள்ளத்தில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள விலங்குகள் (எதிர்க்கட்சி தலைவர்கள்) மரத்தில் அமர்ந்துள்ளன" என கூறினார்.

அதே போல் மத்திய மந்திரியும், பா.ஜ.க.வின் மூத்த பெண் தலைவருமான ஸ்மிரிதி இரானி பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை ஓநாய்களின் கூட்டம் என காட்டமாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்