கர்நாடகத்தில் வசிப்பவர்கள் அனைவரும் கன்னடர்களே

கர்நாடகத்தில் வசிப்பவர்கள் அனைவரும் கன்னடர்களே என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2023-02-19 20:35 GMT

ஹாவேரி:

பண்பாட்டை பாதுகாத்தவர்

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவராஜியின் 396-வது ஜெயந்தி விழா ஹாவேரியில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-

இறப்புக்கு பிறகும் மக்கள் செல்வாக்குடன் திகழ்பவர்கள் சிலரே. அத்தகையவா்களை நாம் யுக புருஷர்கள் என்று நாம் கூறுகிறோம். மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் யுக புருஷர்கள். நமது நாட்டை அடிமையாக்க முயற்சி நடைபெற்றபோது, அதை தடுத்து கலாசாரம், பண்பாட்டை பாதுகாத்தவர் சிவாஜி. முகலாயர் ஆட்சி காலத்தில் தென்இந்தியாவை கைப்பற்ற தைமூர் சதி செய்தார். அவரது சதிப்படி சில மாநிலங்கள் அவரது வசம் சென்றன.

மக்களை காப்பாற்றினார்

அவர்களுக்கு எதிராக சிவாஜி கொரில்லா போர் நடத்தினார். இதன் மூலம் அவர் பல்வேறு பகுதிகளை தன்வசப்படுத்தினார். இதன் மூலம் அவர் மக்கைளை காப்பாற்றினார். கர்நாடகத்தில் உள்ள அனைத்து மொழி, இன மக்களை சமமாக பாா்க்கும் நிலை தொடக்கத்தில் இருந்தே உள்ளது. ஆனால் கன்னடர்களுக்கு முதல் இடம். கர்நாடகத்தில் வசிப்பவா்கள் அனைவரும் கன்னடர்களே.

அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்வது எங்களின் அடிப்படை மந்திரம். சமூகத்தின் கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் அரசின் வளர்ச்சி திட்டங்களின் பயன்கள் கிடைக்க வேண்டும். இந்த முறை பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது மக்கள் நலன் சார்ந்த, உழைக்கும் வர்க்கத்தினரை பலப்படுத்தும் பட்ஜெட். கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக நான் தொடர்ந்து பணியாற்றுவேன்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்