சுரங்க முறைகேடு வழக்கு: சி.பி.ஐ. சம்மன் - அகிலேஷ் யாதவ் இன்று ஆஜராகமாட்டார் என தகவல்

5 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கில் அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-02-29 10:08 GMT

கோப்புப்படம் 

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் கடந்த 2012 முதல் 2017-ம் ஆண்டு வரை சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முதல்-மந்திரியாக இருந்தார். இவருடைய பதவி காலத்தில் சுரங்கங்களை குத்தகைக்கு விடுவதில் பெரும் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. பொதுப்பணித்துறையினர் சட்டவிரோதமாக சுரங்கத்தை அனுமதித்ததாகவும், சுரங்கம் தோண்டுவதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்திருந்த போதும் சட்ட விரோதமாக உரிமங்களை புதுப்பித்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, சுரங்க முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் 2016-ம் ஆண்டு ஆரம்ப விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த சி.பி.ஐ., 2012-2013 வரையிலான காலக் கட்டத்தில் மாநில சுரங்கத்துறையை அகிலேஷ் யாதவ் கவனித்து வந்தபோது இந்த முறைகேடு நடந்ததாகவும், ஒரே நாளில் 13 சுரங்க குத்தகைகளுக்கு முதல்-மந்திரி அலுவலகம் அனுமதி அளித்ததாகவும் குற்றம் சாட்டியது. அதனை தொடர்ந்து, சுரங்க முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரகலா, சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.சி. ரமேஷ் குமார் மிஸ்ரா உள்ளிட்ட 11 பேர் மீது சி.பி.ஐ. கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு, சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் சமாஜ்வாடி கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. நேற்று சம்மன் அனுப்பியது. அதில் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கில் அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அகிலேஷ் யாதவ் இன்று சி.பி.ஐ. முன் ஆஜராகமாட்டார் என்று சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, "கடந்த 5 ஆண்டுகளாக இந்த வழக்கு தொடர்பாக ஏன் தன்னிடம் இருந்து எந்த தகவலையும் பெறவில்லை என்றும் இன்று விசாரணைக்கு ஆஜராக இயலாது; விசாரணையில் சி.பி.ஐ.க்கு அனைத்து ஒத்துழைப்பையும் தருவேன் என்றும் அகிலேஷ் உறுதியளித்துள்ளார்" என்று கூறினார்.

மேலும் சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி கூறும்போது, "அகிலேஷ் யாதவ் லக்னோவில் இன்று நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார். வேறு எங்கும் அவர் செல்லவில்லை. சி.பி.ஐ. சம்மன் தொடர்பான தகவல்கள் இல்லை. ஆனால், அவர் இன்று டெல்லி செல்லவில்லை என்பது உறுதி" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்