ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேளாண் துறை பெண் அதிகாரி கைது

ராகி மூட்டைகளை கொள்முதல் செய்ய விவசாயியிடம் ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேளாண் துறை பெண் அதிகாரியை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-01 04:45 GMT

சிக்கமகளூரு-

ராகி மூட்டைகளை கொள்முதல் செய்ய விவசாயியிடம் ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேளாண் துறை பெண் அதிகாரியை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.

ரூ.9 ஆயிரம் லஞ்சம்

சிக்கமகளூரு தாலுகா திம்மனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். விவசாயி. இவர் தனது விளைநிலத்தில் விளைந்த 365 ராகி மூட்டைகளை சிக்கமகளூரு விவசாய கூட்டுறவு மைய அலுவலகத்தில் கொண்டு சென்று அரசின் மானிய விலையில் கொடுத்தார். அப்போது அங்கு அதிகாரியாக இருந்த அனுசியா, ராகியை கொள்முதல் செய்ய வேண்டும் என்றால் தனக்கு ரூ.9 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என மஞ்சுநாத்திடம் கூறியுள்ளார்.  இந்த நிலையில் அவர் ரூ.5 ஆயிரத்தை முன்பணமாக கொடுத்துள்ளார். மேலும் ரூ.4 ஆயிரத்தை விரைவில் கொடுப்பதாக தெரிவித்தார். இதற்கு அனுசியாவும் சம்மதம் தெரிவித்தார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மஞ்சுநாத், இதுகுறித்து லோக் அயுக்தாவில் புகார் அளித்தார்.

கைது

அப்போது லோக் அயுக்தா போலீசார் அவருக்கு சில அறிவுரைகளை கூறினர். பின்னா் லோக் அயுக்தா போலீசார் கொடுத்த ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை விவசாயத்துறை அதிகாரி அனுசியாவை சந்தித்து மஞ்சநாத் கொடுத்தார். அந்த பணத்தை அனுசியா வாங்கினார். அப்போது அங்கு மறைந்து இருந்த லோக் அயுக்தா போலீசார், அனுசியாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லஞ்சப்பணத்தையும் பறிமுதல் செய்தனர்.   இதுகுறித்து லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்