சமூக வலைதளங்களை பயன்படுத்த வயது கட்டுப்பாடு
போலி கணக்குகளை முடக்க கோரிய விவகாரத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்த வயது கட்டுப்பாடு தேவை என மத்திய அரசுக்கு கர்நாடக ஐகோர்ட்டு பரிந்துரை செய்துள்ளது.;
பெங்களூரு:-
ரூ.50 லட்சம் அபராதம்
சமூக வலைதளங்களில் பதவிடப்படும் கருத்துகள் பொது அமைதியை அச்சுறுத்தும் விதத்தில் அமைகிறது. நாட்டில் நடைபெறும் கலவரங்களுக்கு தூண்டுதலாக இதுபோன்ற சமூக வலைதள கருத்துக்கள் இருக்கிறது. டுவிட்டர் (எக்ஸ் தளம்) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளை தொடங்கி அதன் மூலம் பொய் மற்றும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் கருத்துகளை மர்மநபர்கள் பதிவிடுகின்றனர்.
இந்த நிலையில் போலி கணக்குகள் மற்றும் பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படும் கணக்குகளை கண்டறிந்து அவற்றை முடக்க செய்ய வேண்டும் என அப்போது அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.
ரூ.50 லட்சம் அபராதம்
ஆனால் அந்த உத்தரவை அந்த நிறுவனம் பின்பற்றாமல் இருந்தது. இதுதொடர்பாக எக்ஸ் தள நிறுவனம் மீது கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு மீதான விசாரணையின்போது, மத்திய அரசின் உத்தரவை பின்பற்றாமல் இருந்ததாக கூறி அந்த நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்தது. இதற்கிடையே எக்ஸ் தள நிறுவனம் சார்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் நரேந்தர், விஜயகுமார் பட்டீல் ஆகியோர் விசாரித்தனர்.
சிறந்த தீர்வு
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் கூறுகையில், தற்போதைய இளைய சமூகத்தினர் சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். எனவே வயது அடிப்படையில் சமூக வலைதளங்களை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எப்படி ஆதார் உள்ளிட்ட அடையாள தகவல்கள் தேவைப்படுகிறதோ, அதேபோல் சமூக வலைதளங்களுக்கும் ஆதார் உள்ளிட்ட விவரங்களை கட்டாயப்படுத்துவது சிறந்த தீர்வு ஆகும் என்றனர்.
மேலும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு வயது கட்டுப்பாட்டை கட்டாயப்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் பரிந்துரை செய்தனர்.