மராட்டிய வாகனங்கள் மீது தாக்குதல்: பசவராஜ் பொம்மையுடன் தொலைபேசியில் பேசிய பட்னாவிஸ்

மராட்டிய வாகனங்கள் மீது கர்நாடகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், அந்த மாநில முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை தொடர்பு கொண்டு அதிருப்தி தெரிவித்து உள்ளார்.

Update: 2022-12-06 16:11 GMT

மும்பை,.

கர்நாடகம், மராட்டியம் இடையே எல்லை பிரச்சினை மீண்டும் பூதாகரமாகி உள்ளது. நேற்று கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் ஹிரேபாக்வாடி சுங்க சாவடி அருகில் கர்நாடக அமைப்பினர் மராட்டிய வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி இருமாநிலங்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக அரசை கண்டித்து மராட்டியத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. இந்தநிலையில் கர்நாடகாவில் மராட்டிய வாகனங்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு துணை முதல்-மந்திரி பட்னாவிஸ், கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை போனில் தொடர்பு கொண்டு அதிருப்தி தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக துணை முதல்-மந்திரிக்கு நெருக்கமான வட்டாரங்கள் , " தேவேந்திர பட்னாவிஸ், கர்நாடக முதல் - மந்திரி பசவராஜ் பொம்மையை போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் ஹிரேபாக்வாடி தொடர்பாக பசவராஜ் பொம்மையிடம் அதிருப்தியை தெரிவித்தார். அதற்கு கர்நாடக முதல்-மந்திரி சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து உள்ளார். மேலும் மராட்டியத்தில் இருந்து கர்நாடகத்துக்கு வரும் வாகனங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதாகவும் பட்னாவிசிடம் உறுதி அளித்தார். " என கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்