கொள்ளேகாலில் போலீஸ் ஏட்டுவின் தாய் படுகொலை

கொள்ளேகாலில் போலீஸ் ஏட்டுவின் தாயை, எதிர் வீட்டுக்காரர்கள் கல்லால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-09-23 21:02 GMT

கொள்ளேகால்:-

போலீஸ் ஏட்டுவின் தாய்

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் சிவக்குமார். இவரது சொந்த ஊர் கொள்ளேகால் தாலுகா சத்தேகாலா கிராமம் ஆகும். இவரது தந்தை மகாதேவய்யா கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். சிவக்குமாரின் தாய் சிக்கதாயம்மா(வயது 63) மட்டும் கிராமத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சிக்கதாயம்மாவுக்கும், அவரது எதிர்வீட்டில் வசித்து வரும் கிருஷ்ணா என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கல்லால் தாக்கி கொலை

நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணா, தனது மகன் பிரேம், மகள் சஞ்சனா, அக்காள் கெம்பம்மா ஆகியோருடன் சேர்ந்து சிக்கதாயம்மாவை சரமாரியாக தாக்கினார். மேலும் கற்களையும் கொண்டு அவர்கள் தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சிக்கதாயம்மா பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து கொள்ளேகால் புறநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிக்கதாயம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்