வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

Update: 2022-12-03 21:16 GMT

மைசூரு:-

மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா சிங்கபுரா கிராமத்தை சேர்ந்தவர் சச்சின் (வயது 21). இவர் கடந்த மாதம் (நவம்பர்) 28-ந்தேதி பாண்டவபுராவில் நடந்த விபத்தில் பலத்த காயம் அடைந்தார். பின்னர் அவர் மைசூருவில் உள்ள ஜே.எஸ்.எஸ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சச்சின் மூளைச்சாவு அடைந்தார். இதுபற்றி டாக்டர்கள், அவரது பெற்றோரிடம் கூறினர். இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதையடுத்து அவர்கள் தங்கள் மனதை கல்லாக்கி கொண்டு, மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக டாக்டர்களிடம் தெரிவித்தனர். சச்சினின் பெற்றோரின் இந்த முடிவை வரவேற்ற டாக்டர்கள், அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் சச்சினின் உடல் உறுப்புகளை தானமாக பெற்று கொண்டனர். அவரது இதயம், கண்கள், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியவை எடுக்கப்பட்டன. இதையடுத்து தானமாக பெறப்பட்ட இதயம் மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிக்கு பொருத்தப்பட்டது. சில உடல் உறுப்புகள் பெங்களூருவுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. ஜே.எஸ்.எஸ். மருத்துவமனையில் இருந்து ஜீரோ போக்குவரத்தில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு உடல் உறுப்புகள் கொண்டு வரப்பட்டன. இதன்மூலம் பலர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்