தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் நடிகை ஜெயப்பிரதா விடுதலை

தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ஜெயப்பிரதாவை விடுதலை செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-07-12 05:32 GMT

லக்னோ,

பிரபல பாலிவுட் நடிகை ஜெயப்பிரதா. இவர் தமிழ். தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இதனிடையே, சினிமா துறையிலிருந்து விலகிய ஜெயப்பிரதா 1994ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். அதன்பின்னர் ஜெயப்பிரதா மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய ஜெயப்பிரதா 2019ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார். 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் ஜெயப்பிரதா பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டார். இவர் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அப்போது அவர் தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக உத்தரபிரதேசத்தின் கெம்ரி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ராம்பூரில் உள்ள எம்பி, எம்எல்ஏ-க்களுக்கான கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. 5 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் நடிகை ஜெயப்பிரதாவை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிபதி சோபித் பன்சால் தீர்ப்பு வழங்கினார்.

வழக்கின் தீர்ப்பை அறிவதற்காக கோர்ட்டில் ஆஜராகி இருந்த ஜெயப்பிரதா, தீர்ப்பை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இந்த தருணத்தை ஒருபோதும் மறக்கமாட்டேன் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்