சிறுவன் சாவுக்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை

துமகூரு மாவட்டம் மதுகிரியில் சிறுவன் சாவுக்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் எச்சரித்துள்ளார்.;

Update:2022-12-04 02:28 IST

துமகூரு:-

இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறிஇருப்பதாவது:-

சிறுவன் சாவு

துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகா கொடிகேனஹள்ளியில் 5 வயது சிறுவன் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிர் இழந்துள்ளான். இதுபற்றி எனது கவனத்திற்கு வந்ததும் மிகுந்த வேதனை அடைந்தேன். அந்த சிறுவன் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) மாலை 4.15 மணியளவில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளான். சிறுவனை பெற்றோர் மீட்டு கொடிகேனஹள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

அந்த சந்தர்ப்பத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள், பிற ஊழியர்கள் இல்லாமல் இருந்துள்ளனர். 4.30 மணிவரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த டாக்டர்கள், பக்கத்தில் உள்ள மற்றொரு கிராமத்திற்கு சென்றிருந்தனர். அங்கிருந்து டாக்டர்கள் வருவதற்குள் சிறுவன் உயிர் இழந்துள்ளான். சரியான நேரத்தில் சிறுவனுக்கு சிகிச்சை கிடைத்திருந்தால் உயிர் பிழைத்திருப்பான் என்று பெற்றோர் கூறியுள்ளனர்.

டாக்டர்கள் மீது நடவடிக்கை

கோடிகேனஹள்ளி ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணிநேரமும் செயல்படுவதாகும். அங்கு 2 டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும். அந்த 2 டாக்டர்களும் தங்களுக்குள் பேசி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற வேண்டும். ஏனெனில் 24 மணிநேரமும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு டாக்டர் கண்டிப்பாகபணியில்இருக்க வேண்டும். அப்போது தான்அங்கு வரும் நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை கிடைக்கும்.

சிறுவன் உயிர் இழக்க ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள், ஊழியர்கள் இல்லாதது ஒரு காரணம் என்று குற்றச்சாட்டு வந்திருப்பதால், அதுபற்றி துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையில், டாக்டர்கள் தவறு செய்திருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், ஊழியர்களின் வருகையை அறிந்து கொள்ள பயோ மெட்ரிக் திட்டம் அமலில் உள்ளது. இது மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்படும்.

இவ்வாறு சுதாகர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்