சரக்கு வாகனம்-கார் மோதல்: ஓய்வுபெற்ற வங்கி மேலாளர், மருமகள் சாவு

கல்கட்டகி அருகே சரக்கு வாகனம்-கார் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற வங்கி மேலாளர், மருமகள் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-05-20 18:45 GMT

உப்பள்ளி:

கல்கட்டகி அருகே சரக்கு வாகனம்-கார் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற வங்கி மேலாளர், மருமகள் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

2 பேர் சாவு

தார்வார் மாவட்டம் கல்கட்டகி அருகே நேற்று முன்தினம் காலை கார் ஒன்று உப்பள்ளியில் இருந்து கல்கட்டகி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது தார்வார் கிராஸ் பகுதியில் வைத்து அந்த காரும், எதிரே கல்கட்டகியில் இருந்து உப்பள்ளி நோக்கி வந்த சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் கார் மற்றும் சரக்கு வாகனத்தின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் காரில் இருந்த பெண் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 குழந்தைகள் உள்பட 3 பேரும், சரக்கு வாகன டிரைவரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். இந்த விபத்தை பார்த்த அந்தப்பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஓய்வு பெற்ற வங்கி மேலாளர்

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கல்கட்டகி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பலியானவர்கள் உப்பள்ளியை சேர்ந்த பிரான்சிஸ் போன்சாலிஸ் (வயது 73), அவரது மருமகள் ஒலிவியா கேத்தரின் (36) என்பது தெரியவந்தது.

படுகாயம் அடைந்தவர்கள் பிரான்சிசின் மகன் எலன் (42), பேரப்பிள்ளைகள் சுவா (7), ஜோர்டன் (5) என்பதும், சரக்கு வாகன டிரைவர் கணேஷ் கவுடர் என்பதும் தெரியவந்தது. பிரான்சிஸ் ஓய்வுபெற்ற தனியார் வங்கி மேலாளர் ஆவார். மேலும் ஒலிவியா கேத்தரின் தனியார் நிறுவன ஊழியர் ஆவார். இதுகுறித்து கல்கட்டகி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்