தற்கொலை செய்துகொண்ட மடாதிபதியின் ஆபாச படம் வெளியாகி பரபரப்பு

ராமநகர் அருகே, தற்கொலை செய்து கொண்ட மடாதிபதி பசவலிங்க சுவாமியின் ஆபாச படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு மாகடி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது.

Update: 2022-10-27 18:45 GMT

ராமநகர்:

மடாதிபதி தற்கொலை

ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா குதூர் அருகே உள்ள பண்டே மடத்தின் மடாதிபதியாக பணியாற்றி வந்தவர் பசவலிங்க சுவாமி. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மடத்தில் உள்ள தனது அறையில் மடாதிபதி பசவலிங்க சுவாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் மடாதிபதி அறையில் இருந்து 3 பக்க கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

அந்த கடிதத்தில் சிலர் தனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்படுவதாகவும், சிலர் தன்னை மிரட்டி வருவதாகவும், மடத்தை கைப்பற்ற சிலர் முயற்சி செய்வதாகவும் கூறி இருந்தார். இந்த சம்பவம் குறித்து குதூர் போலீசார் தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் மடாதிபதி அரை நிர்வாணமாக வீடியோ காலில் பேசிய புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு இளம்பெண்

அந்த ஆபாச படத்தை சேர்த்து சிலர் ஹனிடிராப் முறையில் பசவலிங்க சுவாமியை மிரட்டி இருக்கலாம் என்றும், இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதற்கிடையே மடாதிபதி தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தில் மடத்தை சேர்ந்தவர்கள் சிலர் தன்னை மிரட்டி வருவதாக கூறியுள்ளார்.

இதனால் மடத்தை சேர்ந்தவர்களே மடாதிபதியின் ஆபாச படத்தை எடுத்து அதன்மூலம் மிரட்டி இருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதற்கிடையே மடாதிபதி தற்கொலை செய்துகொள்வதற்கு சில தினங்களுக்கு முன்பு அவருக்கு, இளம்பெண் ஒருவர் வீடியோ காலில் பேசியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த இளம்பெண் பெங்களூருவை சேர்ந்தவர் என்று போலீசாருக்கு தெரியவந்து உள்ள நிலையில், அவரது செல்போன் எண்ணும் போலீசாரிடம் சிக்கி உள்ளது.

வழக்கு விசாரணை மாற்றம்

இதனால் அந்த இளம்பெண்ணை பிடிக்க பெங்களூருவில் போலீசார் முகாமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த இளம்பெண் மூலம் மடாதிபதியை சிலர் ஹனிடிராப் முறையில் மிரட்டி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இந்த நிலையில் சந்தேகத்தின்பேரில் 3 பெண்கள், மடாதிபதியின் கார் டிரைவர், மடத்தின் அர்ச்சகர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி அனுப்பி வைத்து உள்ளனர். மேலும் 5 பேரிடம் இருந்து செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

இதற்கிடையே மடாதிபதியின் தற்கொலை வழக்கு விசாரணையை குதூர் போலீஸ் நிலையத்தில் இருந்து மாகடி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் பாபு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், மடாதிபதி உயிரிழந்த வழக்கு ஹனிடிராப் முறையில் கூட மிரட்டல் நடந்து இருக்கலாம். தற்போது விசாரணை நடந்து வருகிறது. ஹனிடிராப் முறையில் மிரட்டியதால் மடாதிபதி தற்கொலை செய்து கொண்டாரா என்று உறுதியாக கூற முடியாது. இந்த வழக்கில் யாருக்கு தொடர்பு இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்