மடாதிபதி பசவலிங்க சாமி தற்கொலை; 3 பக்கம் கடிதம் சிக்கியது-பரபரப்பு தகவல்கள்

ராமநகர் அருகே மடாதிபதி பசவலிங்க சாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய 3 பக்க கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது.

Update: 2022-10-24 18:45 GMT

ராமநகர்:

தூக்கில் தொங்கிய மடாதிபதி

ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா கஞ்சிகல் கிராமத்தில் பண்டே மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக பணியாற்றி வந்தவர் பசவலிங்க சாமி(வயது 44). இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மடத்தின் ஊழியர்கள், பக்தர்களிடம் பேசிவிட்டு தனது அறைக்கு பசவலிங்க சாமி சென்றார். நேற்று காலை நீண்ட நேரம் ஆனபோதிலும் மடாதிபதி பசவலிங்க சாமி தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மடத்தின் ஊழியர்கள், பக்தர்கள் மடாதிபதியின் அறையின் கதவை தட்டினர். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த மடத்தின் ஊழியர்கள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது தனது அறையின் ஜன்னல் கம்பியில் பசவலிங்க சாமி தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் கதறினர். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் குதூர் போலீசார் மடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மடாதிபதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக நெலமங்களா அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும் ராமநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் பாபு மடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரணை நடத்தினார்.

கடிதம் சிக்கியது

இந்த விசாரணையின் போது மடாதிபதி பசவலிங்க சாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதற்கிடையே மடாதிபதி எழுதி வைத்திருந்த 3 பக்க கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் சிலர் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தன்னை பற்றி அவபிரசாரம் செய்து வருவதாக மடாதிபதி எழுதி இருந்தார்.

மேலும் பண்டே மடத்தின் மடாதிபதி பதவியை கைப்பற்ற இன்னொரு மடத்தின் மடாதிபதி முயற்சி செய்து வருவதாகவும், தனக்கு சிலரிடம் இருந்து மிரட்டல் வருவதாகவும் கடிதத்தில் மடாதிபதி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதவிர வேறு சில தகவல்களையும் மடாதிபதி கடிதத்தில் எழுதி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

மடத்திற்கு வந்த உடல்

பண்டே மடத்தின் மடாதிபதியாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பசவலிங்க சாமி பணியாற்றி வந்து உள்ளார். மேலும் சில மடங்களின் பொறுப்பு மடாதிபதியாகவும் அவர் பணியாற்றி வந்து உள்ளார். பண்டே மடத்தின் வளாகத்தில் மடத்திற்கு சொந்தமான பள்ளி, கல்லூரியும் உள்ளது. மேலும் மடத்திற்கு கோடிக்கணக்கில் சொத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த மடத்தின் மடாதிபதியாக பொறுப்பை ஏற்க இன்னொரு மடாதிபதி முயற்சிகள் மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் பசவலிங்க சாமியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மடாதிபதி தனது நெருக்கமானவர்களிடம் கூறி வருத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே பிரேத பரிசோதனை முடிந்ததும் நேற்று மதியம் நெலமங்களா அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மடாதிபதி பசவலிங்க சாமியின் உடல் மடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அடக்கம்

அங்கு அவரது உடலுக்கு வீரசைவ லிங்காயத் முறைப்படி இறுதி சடங்குகள் நடத்தப்பட்டது. பின்னர் அவரது உடல் மடத்தின் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது பசவலிங்க சாமியின் உடலுக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மடாதிபதி தற்கொலை சம்பவம் குறித்து குதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மடாதிபதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்