ஆம் ஆத்மி, பா.ஜனதா போராட்டத்தால் டெல்லியில் போக்குவரத்து பாதிப்பு

சண்டிகார் மேயர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி பா.ஜனதாவை கண்டித்து ஆம் ஆத்மி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

Update: 2024-02-02 20:37 GMT

புதுடெல்லி,

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு, அமலாக்கத்துறை அனுப்பிய 5-வது சம்மனையும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்தார். இதனிடையே ஆம் ஆத்மி, பா.ஜனதாவினரின் போராட்டத்தால் டெல்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசால் கொண்டு வரப்பட்ட மதுபான கொள்கை மூலம், மதுபான வியாபாரிகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் இந்த கொள்கை ரத்து செய்யப்பட்டது. ஆனாலும் இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு, டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனா பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இதில் டெல்லி துணை முதல்-மந்திரியாக இருந்த மணீஸ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த ஆண்டு நவம்பர் 2-ந்தேதி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இதையடுத்து கடந்த டிசம்பர் 21-ந்தேதி, ஜனவரி 3 மற்றும் 18-ந்தேதிகளிலும் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், என்னை இந்த வழக்கில் கைது செய்ய மத்திய அரசு முயற்சி செய்கிறது என்று குற்றம் சாட்டினார்.

இந்தநிலையில் பிப்ரவரி 2-ந்தேதி (அதாவது நேற்று) ஆஜராகுமாறு 5-வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறைசம்மன் அனுப்பியது.

ஆனால், விசாரணை ஆணையத்தின் முன் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மாட்டார் என்று ஆம் ஆத்மி கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் டெல்லியில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா விரும்புவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. அமலாக்கத்துறை அனுப்பிய 5-வது சம்மனையும் புறக்கணித்த அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜராகவில்லை.

இதனிடையே சண்டிகார் மேயர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி பா.ஜனதாவை கண்டித்து ஆம் ஆத்மி சார்பில் டெல்லி டி.டி.டி.மார்க் பகுதியில் போராட்டம் நடத்தியது. இதில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.

இதேபோல் டெல்லி ஆம் ஆத்மி அரசை கண்டித்து பா.ஜனதா சார்பிலும் அதே பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களால் டெல்லியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்