அமீரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் விசாரணை

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக என்.சி.பி. அதிகாரிகள் இயக்குநர் அமீரிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2024-04-02 12:54 GMT

புதுடெல்லி,

2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் தி.மு.க. நிர்வாகி ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 9ம் தேதி டெல்லியில் கைது செய்தனர்.

இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்படங்களை தயாரித்ததும் தெரியவந்துள்ளது. இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான இறைவன் மிகப்பெரியவன் என்ற திரைப்படத்தையும் ஜாபர் சாதிக் தயாரித்துள்ளார்.

இயக்குநர் அமீர் கைதான ஜாபர் சாதிக்கின் நண்பர் என்பதும் இவரும் சேர்ந்து காபி ஷாப் ஒன்றை இணைந்து தொடங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ஜாபர் சாதிக் உடன் இயக்குநர் அமீருக்கு உள்ள தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தலாம் என தகவல் வெளியானது. இந்த சூழ்நிலையில் விசாரணைக்கு வரும் 2ம் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி அமீருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி இருந்தது.

இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக டெல்லியில் உள்ள தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் இயக்குநர் அமீர் இன்று காலை நேரில் ஆஜரானநிலையில், டெல்லியில் இயக்குனர் அமீரிடம் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக என்சிபி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விசாரணையின் போது இயக்குநர் அமீரின் வழக்கறிஞர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்