ராகுல் காந்தி பாதயாத்திரை: மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தரப்பிலிருந்து ஆதித்ய தாக்கரே பங்கேற்கலாம் என தகவல்!
ராகுல் காந்தியின் பாத யாத்திரை தெலுங்கானாவில் இருந்து மராட்டிய மாநிலத்துக்கு இன்று இரவு நுழைகிறது.
மும்பை,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை (பாரத் ஜோடா யாத்ரா) மேற்கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி ராகுல்காந்தியின் பாதயாத்திரை கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடாகா, ஆந்திரா மாநிலங்களில் பாதயாத்திரை மேற்கொண்ட பிறகு அவர் தெலுங்கானாவுக்கு சென்றார்.
தெலுங்கானா மாநிலத்தில் ராகுல் காந்தியின் பாத யாத்திரை கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இன்றுடன் அங்கு அவரது யாத்திரை நிறைவு பெறுகிறது.
ராகுல் காந்தியின் பாத யாத்திரை தெலுங்கானாவில் இருந்து மராட்டியம் மாநிலத்துக்கு இன்று இரவு நுழைகிறது. மராட்டியத்தில் நாளை காலை 8.30 மணியில் இருந்து ராகுல் காந்தி பாதயாத்திரை தொடங்குகிறது.ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் பங்கேற்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பல கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்து உள்ளது.
இந்த நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணியைச் சேர்ந்த தலைவர் அஹிர் கூறுகையில், "மராட்டியத்தில் ராகுல் காந்தி தலைமையில் நடக்கும் இந்திய ஒற்றுமை பாதயாத்திரையில் சிவசேனா தரப்பிலிருந்து ஆதித்ய தாக்கரே பங்கேற்கலாம்.இது குறித்து கட்சித் தலைவருடன்(உத்தவ் தாக்கரே) கலந்துரையாடிய பிறகு முடிவு எடுக்கப்படும்.
பாரத் ஜோடோ(இந்திய ஒற்றுமை) யாத்திரையின் நோக்கம், அனைவரையும் ஒன்றிணைப்பதாகும். சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆகவே இந்த முயற்சியை மராட்டியத்தில் வரவேற்க வேண்டும்" என கூறினார்.
அஹிர் மராட்டிய மாநில சட்ட மேலவை உறுப்பினராகவும், சிவசேனாவின் உத்தவ் தாக்கரே தலைமையிலான பிரிவின் செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார். இதன் மூலம், பாஜகவை எதிர்த்து வரும் உத்தவ் தாக்கரே தரப்பு, இப்போது மீண்டும் காங்கிரசுக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்துள்ளது.