ஆதார் அட்டை விவரங்களை அடுத்த 3 மாதங்களுக்கு இணையத்தில் இலவசமாக புதுப்பிக்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
இணையத்தில் ஆதார் அட்டை புதுப்பிக்கும் சேவை ஜூன் 14-ந்தேதி வரை இலவசமாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
ஆதார் அட்டை விவரங்களை இணையதளத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக புதுப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று இதுவரையில் புதுப்பிக்காதவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சேவை மார்ச் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை இலவசமாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை 'my Aadhaar' எனும் இணையதளத்தில் மட்டுமே இலவசமாகப் பெற முடியும் என்றும், ஆதார் மையங்களில் நேரடியாக சென்று புதுபித்தால் வழக்கம்போல் ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) லட்சக்கணக்கான மக்கள் பயனடையும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பயனாளர்கள் 'myaadhaar.uidai.gov.in' எனும் இணையத்தில் தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி தங்களின் தரவுகளை புதுப்பித்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.