நாக்பூரில் வேலையில் இருந்து நீக்கியதால் கடைக்கு தீவைத்த தொழிலாளி
நாக்பூரில் வேலையில் இருந்து நீக்கியதால் ஆத்திரமடைந்த தொழிலாளி கடைக்கு தீவைத்துள்ளார்.;
நாக்பூர்,
மராட்டிய மாநிலம் நாக்பூரில் பெயிண்ட் கடை நடத்தி வருபவர் புர்கான் தாவூத் அஜீஸ் தாவூத் (வயது 29). இவரது கடையில் கடந்த செவ்வாய்க்கிழமை தீவிபத்து ஏற்பட்டு ரூ.45 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து வீணானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தாவூத் கடையின் பக்கத்து கடையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது தாவூத் கடையில் வேலை பார்த்து வந்த ரவுனக் பாலிவால் (24) என்பவர் கடையின் ஷட்டரின் இடைவெளி வழியாக பெட்ரோலை ஊற்றி தீவைத்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதை தொடர்ந்து அந்த சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் பாலிவாலை கைது செய்தனர். தன்னை பணிநீக்கம் செய்ததற்கு பழிவாங்கவே கடைக்கு தீ வைத்ததாக பாலிவால் விசாரணையில் தெரிவித்து உள்ளார்.