அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்து பெண்
சிவமொக்காவில், அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்து விட்டு ‘சிலாப்'பில் மறைத்து வைத்துவிட்டு நாடகமாடிய சம்பவம் நடந்துள்ளது.
சிவமொக்கா:
அரசு ஆஸ்பத்திரி கழிவறையில்...
சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் உடல்நலக்குறைவால் சிகிச்சைக்கு வந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதற்கிடையே அரசு ஆஸ்பத்திரி கழிவறையின் சிலாப்பில் பெண் குழந்தை இருந்ததை ஊழியர்கள் சிலர் பார்த்துள்ளனர். இதையடுத்து குழந்தையை மீட்ட ஊழியர்கள் இதுபற்றி டாக்டர், செவிலியர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் குழந்தையின் உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். மேலும் குழந்தையின் தாய் குறித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரித்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரித்தனர். அவர், குழந்தை தன்னுடையது இல்லை என்று தெரிவித்தார்.
போலீசார் விசாரணை
இதையடுத்து தொட்டபேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண்ணிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அதில் கழிவறை 'சிலாப்'பில் இருந்த குழந்தை என்னுடையது தான் என்று ஒப்புக் கொண்டார். மேற்கொண்டு அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
வளர்க்க விருப்பம் இல்லை
அதாவது, டிப்ளமோ படித்த பெண், சிகாரிப்புரா வாலிபர் ஒருவரை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளார்.
சிகாரிப்புரா பதிவு திருமணம் அலுவலகத்தில் வைத்து 2 பேரும் திருமணம் செய்துள்ளனர். இதற்கிடையே பெண், கர்ப்பம் தரித்து நிறைமாத கர்ப்பிணியாகி உள்ளார். கடந்த 7-ந்தேதி இரவு உடல்நல குறைவு என்று கூறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். மறுநாள் இரவு கழிவறைக்கு சென்ற போது பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அலறி துடித்த பெண், கழிவறையிலேயே பெண் குழந்தையை பெற்றுள்ளார்.
ஆனால் குழந்தையை வளர்க்க விருப்பமில்லாத காரணத்தால் குழந்தையை கழிவறையில் இருந்த 'சிலாப்' மீது வைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் வெளியே வந்து தனது படுக்கைக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில்தான் ஊழியர்கள் கழிவறையை சுத்தம் செய்ய சென்றபோது குழந்தையை கண்டுபிடித்தது தெரியவந்தது. தாய்-சேய்யை தொடர்ந்து கண்காணித்து வரும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் தொட்டபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.