இளம்பெண்ணின் புகைப்படத்தைஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டல்
மங்களூருவில் இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டிய மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மங்களூரு
ஆன்ைலன் செயலி மூலம் கடன்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் பாண்டேஷ்வர் பகுதியை சேர்ந்த இளம்பெண் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இளம்பெண் அந்தப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் இளம்பெண் ஆன்லைன் மூலம் கடன் வாங்க முடிவு செய்தார்.
அதன்படி அவர் ஆன்லைன் கடன் செயலியில் ரூ.10 ஆயிரத்திற்கு விண்ணப்பித்தார். இதையடுத்து இளம்பெண் வங்கி கணக்கிற்கு ரூ.7 ஆயிரத்திற்கு 500 பணம் வந்தது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்ணின் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது. அதில் ரூ.14 ஆயிரம் ஆன்லைன் மூலம் கடன் வாங்கலாம் என இருந்தது.
இதையடுத்து இளம்பெண் அதன்படி ஆன்லைன் செயலி மூலம் மீண்டும் ரூ. 14 ஆயிரம் கடன் வாங்கினார். இதையடுத்து அவர் ஆன்லைன் மூலம் வாங்கிய கடனை செலுத்தினார்.
மர்மநபர் மிரட்டல்
இந்தநிலையில் இளம்பெண்ணிற்கு மர்மநபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதில், நீங்கள் ஆன்லைனில் வாங்கிய கடனை செலுத்தவில்லை. இதனால் உடனே கடனை செலுத்த வேண்டும் அப்படி இல்லையென்றால் உங்களது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவோம் என கூறி மிரட்டினர்.
இதனால் பயந்துபோன இளம்பெண் மர்மநபர் கூறிய வங்கி எண்ணிற்கு ரூ.51 ஆயிரத்தை அனுப்பி வைத்தார். இந்தநிலையில், மீண்டும் மர்மநபர் இளம்பெண்ணிற்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பணம் வேண்டும் என கூறி மிரட்டினார்.
போலீசில் புகார்
இதுகுறித்து இளம்பெண் தனது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து அவர்கள் பாண்டேஷ்வர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டிய மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.