வயலில் வரிப்புலி நடந்து செல்ல... பின்னணியில் நிலத்தில் உழுது செல்லும் விவசாயி; வைரலான வீடியோ

உத்தர பிரதேசத்தில் வயலில் வரிப்புலி நடந்து செல்ல பின்னணியில் விவசாயி நிலத்தில் உழுது செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

Update: 2023-07-15 13:54 GMT

பிலிபித்,

வன விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்படும் செய்திகள் வெளிவருவது உண்டு. விலங்குகளின் வாழ்விடங்களில் மனிதர்கள் வாழ்வை அமைத்து கொள்ளும்போதும், ஊருக்குள் இரை தேடி அவை வரும்போதும், வழித்தடங்கள் மறைந்து போகும்போதும் என பல்வேறு சம்பவங்களில் விலங்குகள் மற்றும் மனிதர்கள் இடையேயான மோதல்கள் ஏற்படுகின்றன.

எனினும், இயற்கையான சூழலில், இரு தரப்பினரும் ஒன்றாக காண கூடிய விசயங்களும் நடைபெறுகின்றன. உத்தர பிரதேசத்தின் பிலிபித் மாவட்டத்தில் வயல்வெளி ஒன்றில் வரிப்புலி ஒன்று மெதுவாக நடந்து செல்கிறது. சற்று தொலைவில் டிராக்டர் ஒன்றில் விவசாயி ஒருவர் தனது நிலத்தில் உழுதபடி செல்கிறார்.

இந்த காட்சியை மற்றொரு விவசாயி வீடியோவாக பதிவு செய்து உள்ளார். இதனை ராஜ் லக்கானி என்ற பயனாளர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.

இந்த வீடியோ வெளியானதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு உள்ளனர். 2 லட்சத்திற்கும் கூடுதலானோர் லைக் செய்து உள்ளனர். இதற்கு பயனாளர்களில் ஒருவர், வரிப்புலியின் கம்பீர நடை என கூறியுள்ளார்.

எனினும், மனிதர்கள் மற்றும் விலங்குகள் ஒன்றாக இயற்கை சூழலில் உள்ளனர். அதனை ரசியுங்கள் என மற்றொருவர் கூறியுள்ளார். புலிகளை பாதுகாக்கும் முயற்சியாக நாட்டில் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்