முதல்-மந்திரியாக பதவி ஏற்று ஓராண்டு நிறைவு: பெங்களூரு அருகே வருகிற 28-ந் தேதி பிரமாண்ட ஊர்வலம் - பசவராஜ் பொம்மை பேட்டி
முதல்-மந்திரியாக பதவி ஏற்று ஓராண்டு நிறைவு பெற்றதை தொடர்ந்து பெங்களூரு அருகே வருகிற 28-ந் தேதி பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்படும் என்று பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்று ஓராண்டு நிறைவு பெற உள்ளது. இந்த ஆண்டு நிறைவு விழாவை கட்சி சார்பிலேயே கொண்டாட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதையொட்டி வருகிற 28-ந் தேதி பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் உள்ள தொட்டபள்ளாப்புராவில் பிரமாண்ட ஊர்வலம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் பெங்களூருவிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அரசு அலுவலகங்களில் புகைப்படம், வீடியோ எடுக்க தடை விதித்தது குறித்து எனது கவனத்திற்கு முதலில் வரவில்லை.
பெண் ஊழியர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பது தான் அரசின் நோக்கமாகும். இந்த விவகாரத்தில் அரசு மீது யார் வேண்டுமானாலும் குற்றச்சாட்டுகளை கூறலாம். ஆனால் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு துறை அலுவலகங்களிலும் எந்த விதமான பாரபட்சமும் இல்லாமல் பணிகள் நடந்து வருகிறது. அதனால் அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கு எவ்விதமான தடையும் விதிக்கப்படாது. ஏற்கனவே இருந்த நடைமுறைகளே தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.